விஜய்க்கு பேசவே தெரியல… ஆதவ்வை பார்த்து கத்துக்க சொல்லும் நடிகை கஸ்தூரி

கோவை விமான நிலையத்தில் பாஜ பிரமுகரும், நடிகையுமான கஸ்தூரி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ரசிகர்கள் திரள்வதை வைத்து புதிதாக நடிகர் துவங்கிய கட்சிக்கு ஆதரவு இருக்கிறது என சொல்ல முடியாது. தேர்தலில் திமுகவிற்கும், தவெகவிற்கும் தான் போட்டி என விஜய் தொடர்ந்து சொல்வதே சாதனை தான். விஜய் மாநாடுக்கு மாநாடு பேசுகின்றார். பிறகு கம்முனு இருக்கிறார். அடுத்த மாநாட்டிற்கு வந்து அதே டெம்பிலேட்டில் பேசுகின்றார். தமிழ்நாட்டில் நடக்கும் எந்த பிரச்னைக்கும் அவர் குரல் கொடுக்கவில்லை. கேரளாவில் கிறிஸ்தவர் தாக்கப்பட்டதுக்கு மட்டும் அறிக்கை கொடுத்தார்.

ஆதவ் அர்ஜூனா பேசும் அளவிற்கு கூட விஜய் பேசுவதில்லை. சைலன்டாக வெற்றி பெறுவது எல்லாம் எம்ஜிஆருடன் முடிந்து விட்டது. வேறு யாரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது. தவெகவில் விருப்பமனு வாங்குவதை வைத்து ஆதரவு இருப்பதாக கூற முடியாது. அந்த மனுவை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும், பின்பு போட்டியிட வேண்டும். மனு தாக்கலாக வேண்டும். நிறைய விஷயங்கள் இருக்கின்றது. ஜனநாயகத்தில் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. மக்கள் வாக்கு அளிப்பதில் தான் யாருக்கு ஆதரவு இருக்கிறது என கூற முடியும். தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை சொல்வதை செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

* இருங்க… பாய் மேக்கப் போட்டு வர்றேன்…!
கோவையில் பாஜ சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க நடிகை கஸ்தூரி நேற்று மதியம் கோவை விமான நிலையத்திற்கு வந்தார். அவரை வரவேற்க சில பாஜ நிர்வாகிகள் காத்திருந்த நிலையில், மேக்கப் இல்லாமல் சாதாரணமாக வெளியே வந்தார். அப்போது பத்திரிகையாளர்கள் பேட்டியெடுக்க காத்திருப்பதாக நிர்வாகிகள் கஸ்தூரியிடம் கூறியதும், ஒரு நிமிடம் காத்திருக்குமாறு கூறியபடி திரும்பிச்சென்றார். விமான நிலைய முகப்பு கண்ணாடியை பார்த்தபடி தலையை வாரி, பவுடர், லிப்ஸ்டிக் உள்ளிட்டவற்றை போட்டு அலங்காரப்படுத்திக்கொண்டு, பொட்டு வைத்துக்கொண்டு மீண்டும் வந்து, நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

* கோவை நமக்கு செட் ஆகாது பம்மி ஓடும் தவெக
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படலாம் என கூறப்படும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணியில் வேறு எந்த கட்சியும் இணையவில்லை. பெரிதும் எதிர்பார்த்த டிடிவி அமமுக, பாஜவின் நிர்பந்தத்தால் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சென்று விட்டது. கூட்டணி ஆட்சி அமைப்போம், ஆட்சியில் பங்கு தருவோம் என்ற ஆசை வார்த்தைகளை அள்ளி விட்ட போதும், யாரும் கண்டு கொள்ளாததால் தவெகவினர் அதிருப்தி அடைந்தனர். இதனால் கிட்டத்தட்ட தனித்து போட்டியிட வேண்டிய சூழலுக்கு தவெக தள்ளப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பே இல்லை என தவெக நிர்வாகிகளே கூறி வரும் நிலையில், அங்கு தேர்தலில் போட்டியிட தவெக நிர்வாகிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். பலம் வாய்ந்த திமுக, அதிமுக கூட்டணிகளை மீறி வெற்றிபெற வாய்ப்பில்லை என்பதால், தேர்தலுக்கு செலவு செய்வது வீண் விரயம் என்பதை உணர்ந்து போட்டியில் இருந்து தாமாக விலகி வருவதாக கூறப்படுகிறது.
கோவை தெற்கு மாவட்டச் செயலாளராக உள்ள விக்னேஷ் மட்டுமே, கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறார். இதற்கேற்ப தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் தேர்தல் அலுவலகங்களை திறந்து, பணிகளை செய்து வருகிறார்.

அதேபோல தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா ஆகியோரை அழைத்து பொதுக்கூட்டத்தையும் நடத்தியுள்ளார். ஆனால் மற்ற தொகுதிகளில் போட்டியிட மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் யாரும் முன்வரவில்லை. கோவை மாவட்டத்தில் தவெகவில் மக்களிடம் பிரபலமான நபர்கள் யாரும் இல்லை என்பதாலும், தேர்தல் செலவு செய்ய மாவட்டச் செயலாளர்கள் தயக்கம் காட்டி வருவதாலும் யாரை போட்டியிட செய்வது என தவெக தலைமை குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் செங்கோட்டையனின் ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு வழங்கவும் தவெக தலைமை விரும்பாததால், தேர்தலில் தோற்றாலும் மூன்றாவது இடத்திற்கு வரும் அளவிற்கு வாக்குகளை வாங்கும் பலம் கொண்ட, செலவு செய்யும் திறனுள்ள வேட்பாளர்களை வலை வீசி தேடி வருகிறார்களாம்.

Related Stories: