ஆசிரியை, முன்னாள் கவுன்சிலர் வீட்டில் நகை, பணம் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலை வந்தவாசியில் அடுத்தடுத்து துணிகரம்

வந்தவாசி, பிப்.3: வந்தவாசி நகரில் ஆசிரியை, முன்னாள் கவுன்சிலர் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி டவுன் கனக ராமசாமி தெருவை சேர்ந்தவர் தாமோதரன் மனைவி தனலட்சுமி(56), தனியார் பள்ளி ஆசிரியை. இவரது கணவர் தாமோதரன் இறந்துவிட்ட நிலையில், சென்னை ஒரகடத்தில் வேலை செய்து வரும் மகளுக்கு உதவியாக, சென்னை தாம்பரத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். வந்தவாசியில் உள்ள வீட்டிற்கு 15 நாட்களுக்கு ஒருமுறை வந்து செல்வது வழக்கம். அதன்படி, பொங்கல் பண்டிகைக்காக ஊருக்கு வந்து சென்றுள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை தனலட்சுமி வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் தனலட்சுமிக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், ஊருக்கு விரைந்து வந்த அவர், வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ஒரு சவரன் நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், ₹10 ஆயிரம் உண்டியல் பணம் ஆகியன திருட்டு போனது தெரியவந்தது.

அதேபோல், வந்தவாசி சைக்கிள் வரதராஜ முதலி தெருவை சேர்ந்தவர் நகராட்சி முன்னாள் ெபண் கவுன்சிலர் பிச்சைமணி(60). சென்னையில் நடந்த திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக, கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிக்கொண்டு புறப்பட்டு சென்றார். வீட்டின் பின்பக்க கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்ற மர்ம ஆசாமிகள், அறையில் இருந்த 2 பீரோக்களையும் உடைத்து, அதிலிருந்த 26 கிராம் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி பொருட்களை திருடிச்சென்றுள்ளனர்.

இதுகுறித்த புகார்களின்பேரில் வந்தவாசி தெற்கு போலீசார் சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்தினர். 2 வீடுகளிலும் ஆட்கள் இல்லாததை அறிந்து கைவரிசை காட்டியுள்ளதால், உள்ளூர் நபர்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து, அப்பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, மர்ம ஆசாமிகளை தேடிவருகின்றனர். வந்தவாசி நகரில் அடுத்தடுத்து நடந்துள்ள திருட்டு சம்பவம் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: