கவுகாத்தி: அசாம் சட்டப்பேரவைக்கு விரை வில் தேர்தல் நடைபெற உள்ளதால் அங்கு முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் காங்கிரஸ் மாநில தலைவர் கவுரவ் கோகாய்க்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கவுரவ் கோகாய் பாகிஸ்தானுடன் தொடர்புடையவர் என்று முதல்வர் ஹிமந்தா குற்றம் சாட்டி வருகிறார். நேற்றும் இந்த மோதல் தொடர்ந்தது. இதுபற்றி முதல்வர் தனது எக்ஸ் தளத்தில்,’ பாகிஸ்தானின் குடியேற்ற விதிகளின் கீழ், விசாவால் நியமிக்கப்பட்ட நகரங்களுக்கு அப்பால் பயணம் செய்வது குறிப்பிட்ட அங்கீகாரம் இல்லாமல் அனுமதிக்கப்படாது. அப்படி இருக்கும் போது கவுரவ் கோகாய், பாகிஸ்தானின் ராவல்பிண்டி மாவட்டத்திற்கு சென்றது எப்படி?. அவரது விசா லாகூர், கராச்சி மற்றும் இஸ்லாமாபாத்திற்கு மட்டுமே பயணம் செய்ய அனுமதித்தது’ என்று குறிப்பிட்டார்.
இதுபற்றி கவுரவ் கோகாய் கூறுகையில்,’ ஒரு பொய்யை மறைக்க, அவர் 100 பொய்களைச் சொல்கிறார். அசாம் காவல்துறையின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு அறிக்கையில் பாகிஸ்தானுடன் எனக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முதல்வர் சர்மாவின் மருமகன் உட்பட பல பாஜ தலைவர்களின் குழந்தைகள் தங்கள் இந்திய குடியுரிமையை விட்டுக்கொடுத்துள்ளனர்’ என்று பதிலடி கொடுத்தார்.
