ராகுல் காந்தி பேச அனுமதி மறுப்பு மக்களவை மீண்டும் முடங்கியது: பாஜ-எதிர்க்கட்சி எம்பிக்கள் வாக்குவாதம்

புதுடெல்லி: எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் மற்றும் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பெண் எம்பிக்கள் பிரதமர் மோடியை தாக்க சதி நடந்ததாக குற்றச்சாட்டு என கடந்த வார இறுதியில் பரபரப்பான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, மக்களவை நேற்று மீண்டும் கூடியது. காலை 11 மணிக்கு அவை தொடங்கியதும், கேள்வி நேரத்தை நடத்த விடாமல், எம்பிக்கள் சஸ்பெண்ட் மற்றும் பெண் எம்பிக்கள் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பினர். இதுதொடர்பாக பட்ஜெட் மீதான விவாதத்தில் ஆலோசிக்கலாம் என சபாநாயகர் ஓம்பிர்லா வலியுறுத்தியும் அமளி நீடித்ததால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பகல் 12 மணிக்கு அவை மீண்டும் தொடங்கியதும், அவையை வழிநடத்திய கிருஷ்ண தென்னட்டி, பட்ஜெட் மீதான விவாதத்தை தொடங்கி பேசுமாறு காங்கிரஸ் மூத்த எம்பி சசிதரூருக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், அவையின் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் ராகுல் காந்தி சில விவகாரங்களை பேச விரும்புவதால் தனக்கு முன்பாக அவரை பேச அனுமதிக்க வேண்டுமென சசிதரூர் கேட்டுக் கொண்டார். இதற்கு ஆளும் தரப்பு எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் பிற்பகல் 2 மணிக்கு அவை மீண்டும் தொடங்கியதும், சசிதரூர் அதே கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார். அப்போது அவைத் தலைமை பொறுப்பில் இருந்த சந்தியா ராய், ‘‘பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி பேச விரும்பினால் எந்த பிரச்னையும் இல்லை. அவர் பேசத் தொடங்கலாம்’’ என்றார்.

இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, ‘‘ஒரு மணி நேரத்திற்கு முன்பாக எதிர்க்கட்சி எம்பி ஒருவர் சபாநாயகர் ஓம்பிர்லாவை சந்தித்த போது, பட்ஜெட் விவாதத்திற்கு முன்பாக எங்களின் சில முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க அனுமதிப்பதாக ஒப்புக் கொண்டார். ஆனால் அதிலிருந்து நீங்கள் பின்வாங்குவது ஏன்? நான் பேச விரும்பும் விஷயத்தை இந்த அவையில் பேச அனுமதி கிடைக்குமா இல்லையா?’’ என கேள்வி எழுப்பினார். அதே சமயம் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எழுந்து, ‘‘எதிர்க்கட்சி தலைவர் கூறுவது 100 சதவீதம் உண்மையில்லை. அப்படி எந்தவொரு ஒப்பந்தமும் இல்லை. எதிர்க்கட்சி தலைவர் சபாநாயகர் பற்றி ஏதாவது சொல்ல விரும்பினால், அதற்கு பதிலளிக்க சபாநாயகர் பிர்லாவும் அவையில் இருக்க வேண்டும். அப்போது அவையில் மற்ற எம்பிக்களும் அந்த விவகாரத்தை பற்றி பேசுவார்கள்.

விவாதம் நடக்கும். கடந்த வாரம் பிரதமர் மோடி பதிலளிக்க வரும் போது, அவரிடம் இருந்து ஆவணங்களை பறித்துச் செல்ல திட்டமிடப்பட்டிருப்பதாக நம்பத்தகுந்த தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில்தான் அவைக்கு வர வேண்டாம் என பிரதமரை சபாநாயகர் பிர்லா கேட்டுக் கொண்டார். நாடாளுமன்றம் ரவுடித்தனம் செய்வதற்கான இடமில்லை. காங்கிரஸ் தலைமை தனது எம்பிக்களை கட்டுப்படுத்த தவறி விட்டது. காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கே கட்டுப்பாடு இல்லாத போது சபாநாயகர் செய்தது சரிதான்’’ என்றார். இதனால் எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சி எம்பிக்கள் இடையே கடும் வாக்குவாதம் நடந்தததைத் தொடர்ந்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: