மும்பை மாநகர சாலைகளின் அவலநிலை; ‘மரணக் குழி’ நடைபாதையால் மக்களின் உயிருக்கு ஆபத்து: பாலிவுட் நடிகை சோஹா அலிகான் ஆவேசம்

மும்பை: மும்பை மாநகர சாலைகளின் அவலநிலை குறித்து பிரபல நடிகை சோஹா அலிகான் தனது சமூக வலைதள பக்கத்தில் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். மும்பையில் வசித்து வரும் பாலிவுட் நடிகை சோஹா அலிகான் நேற்று நடைப்பயிற்சி மேற்கொண்ட போது அங்கிருந்த நடைபாதைகளின் மோசமான நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்துத் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு காணொளியை வெளியிட்டுள்ள அவர், மும்பையின் நடைபாதைகளை ‘மரணக் குழிகள்’ என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

அந்தப் பதிவில், ‘மாலை நேரத்தில் மனநிம்மதிக்காக நடைப்பயிற்சி சென்றால், உயிருக்கே ஆபத்தான நிலையில் சரிந்து கிடக்கும் நடைபாதைகளைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘நடைபாதைகளில் ஏற்பட்டுள்ள பெரிய பள்ளங்களில் எவர் வேண்டுமானாலும் தவறி விழுந்து பலத்த காயம் அடையக்கூடும். இத்தகைய உடைந்த பாதைகள் பொதுமக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது’ என்று அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சோஹா அலிகான் ஏற்கனவே மும்பையின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மோசமான சாலைப் பராமரிப்பு குறித்துப் பலமுறை தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார். ஒருமுறை தனது மகள் இனாயா சேறும் சகதியுமான சாலையில் குப்பைகள் மற்றும் தடுப்புகளுக்கு இடையே நின்றிருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, இதுதான் நகர வளர்ச்சியின் கசப்பான உண்மை எனக் குறிப்பிட்டிருந்தார்.

Related Stories: