1. 2026 சட்டமன்ற தேர்தலில் முக்கிய கருப்பொருளாக எது எதிரொலிக்கும் என நினைக்கிறீர்கள்? 2026 சட்டமன்ற தேர்தலை தீர்மானிப்பது திமுகவின் தேர்தல் அறிக்கையாக தான் இருக்கும். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகவே திமுகவின் தேர்தல் அறிக்கை தான் ஒவ்வொரு தேர்தலிலும் பேசும் பொருளாக இருந்து வருகிறது. இதை போன்ற தேர்தல் வாக்குறுதிகள் மற்ற எந்த மாநிலங்களிலும் அறிவிக்கப்படவில்லை.
ஏனென்றால் திமுக தேர்தல் அறிவிப்புகளை வெளியிடும் போது, அவை சாத்தியமில்லை என்று விமர்சிப்பதும், அதன் பிறகு அந்த வாக்குறுதிகளை சாத்தியப்படுத்திய பின்னர் அடுத்த தேர்தலில் நாங்களும் அதே அறிவிப்புகளை செய்வோம் என்று சொல்வதும் தான் வரலாறாக இருந்து வருகிறது. அதன் அடிப்படையில் தான் மகளிர் உரிமை தொகையை எடப்பாடி பழனிசாமி இப்போது அறிவித்துள்ளார். ஆரம்பத்தில் இது சாத்தியமில்லை என்று பேசியதை நினைவுபடுத்த விரும்புகிறேன். எனவே, இந்த முறை திமுகவின் தேர்தல் அறிக்கை சுவாரசியமாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும்.
2. திமுக ஆட்சியின் உங்களது மதிப்பீடு என்ன?
திமுக ஆட்சியில் எங்களின் மதிப்பீடு 10க்கு 10. எதற்காக என்றால் ஒரு கட்சி என்பது, ஒரு கட்சி சார்ந்து நடக்கின்ற விஷயம். கட்சி மீண்டும் ஆட்சி வரவேண்டும் என்பதையும், வாக்காளர்களை நோக்கியும் சிந்திக்க வேண்டும். ஆனால் திமுகவின் ஜனநாயகம், முதல்வர் மு.க.ஸ்டாலின் சிந்தனையை பார்த்தால் ஆச்சரியமாக உள்ளது. வாக்கு இல்லாதவர்களான அடுத்த தலைமுறைக்கும் சிந்திக்கிறார். இது கடந்த 5 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளது.
இதுவரை இதுபோன்று யாரும் பார்த்ததில்லை. உதாரணத்திற்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி 10 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு இலவசமாக போடுவதை சொல்லலாம். இவர்கள் யாருக்கும் இந்த தேர்தல் மட்டுமல்ல, அடுத்த தேர்தலிலும் வாக்குகள் கிடையாது. ஆனால் அதன் மூலம் தமிழ்நாட்டில் அடுத்த தலைமுறையே கருப்பை வாய் புற்றுநோய் இல்லாமல் தடுக்கப்படும். அப்படி சிந்திக்கப்படுவதுதான் ஒரு ஆட்சிக்கு மிகவும் முக்கியம். எனவே முதல்வர் ஆட்சிக்கு 10க்கு 10 கொடுப்பேன்.
3. தமிழக முதல்வரின் செயல்பாடு எப்படி உள்ளது?
முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்கும் போது, நான் என் தந்தையை மாதிரி பேசவோ, எழுதவோ தெரியாது என்று சொன்னார். ஆனால் எனக்கு தெரிந்தது எல்லாம் உழைப்பு மட்டும் தான் என்று சொன்னார். இயல்பாகவே இந்தியா வியந்து நிற்கும் ஒரு தலைவரின் மகனாக அவரை ஒப்பிட முடியும். ஆனால் என்னை பொறுத்தவரையில் கடந்த 5 ஆண்டு செயல்பாடுகளில் அவரின் தந்தையான கலைஞர் செயல்பாடுகள், அதற்கு முன்னதாக அறிஞர் அண்ணாவை அவர் தொட்டுவிட்டார் என்றே நம்புகிறேன்.
ஏனென்றால் அண்ணா, எவரையும் கடிந்து பேசியதாக எங்கேயும் பார்க்க முடியாது. அதேபோல் இந்த 5 ஆண்டுகளில் முதல்வர் எப்போதும், யாரையும், எதற்கும் ஒரு புள்ளிகூட தன் நிலையிலிருந்து கீழ் இறங்கி கடிந்து கொள்ளவில்லை. அவர்கள் அப்படி தான் நடந்து கொள்வார்கள் அதற்கு என்ன செய்ய முடியும் என சொல்கிறார். விஜய் நடத்திய கூட்டத்தில் 41 பேர் மரணம் அடைந்த சம்பவத்தில் கூட விஜய்யின் தரப்பில் இருந்து ஆறுதல் சொன்னதை பார்க்கும் போது எந்த தலைவரும் அவ்வாறு நடந்து கொள்ள மாட்டார்கள். எச்.ராஜாவிடம் நலம் விசாரித்துள்ளார். தனிப்பட்ட முறையில் கேட்டால் முதல்வருக்கு இவ்வளவு நாகரிக அரசியல் வேண்டாம் என்பேன்.
4. நடிகர் விஜய் கட்சி தொடங்கி சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறார். தேர்தலில் அவரது பிரதிபலிப்பு எப்படி இருக்கும்? பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வந்தால், பெண்கள் எல்லாம் சுற்றி நின்று அவரை தாக்க திட்டமிட்டார்கள் என்று சொல்கிறார்கள், அதாவது வராத பிரதமரை வந்தால் தாக்க திட்டமிட்டார்கள் என்ற பொய்ைய போன்று, விஜய் வந்தா, விஜய் மட்டுமல்ல எவர் வந்தாலும் எவர் சொல்வதும் அனுமானங்கள் தான்.
விஜய்யின் ஆட்கள் எல்லாரும் அவர் 100 சதவீதம் ஓட்டு வாங்குவார் என்று சொல்வார்கள். ஆனால் அதெல்லாம் எங்கே இருக்கிறது என்று தெரியாது. தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு எளிதாக எவரையும் அரசியலில் ஒப்புக் கொள்வதில்லை. சினிமாவில் அவரை ஏற்றுக் கொள்வதற்கே 10 ஆண்டுகள் எடுத்து கொண்டது. அரசியலில் 2 ஆண்டுகளில் எப்படி ஒப்புக் கொள்வார்கள். அதனால் தேர்தல் வரட்டும், பெட்டியை பிரித்து எண்ணினால் தெரிந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.
