வரும் 12ம் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலிக்க திரள்வோம்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அழைப்பு

சென்னை: தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து, வரும் 12ம்தேதி நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டின் உரிமைக் குரலை ஓங்கி ஒலிக்க திரளாக பங்கேற்க வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய பட்ஜெட்டில், தமிழ்நாட்டிற்கு புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாமல், பாரபட்சமாக நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாட்டை வஞ்சித்துள்ளனர்.

தமிழ்நாட்டிற்கான வரிப்பகிர்வு 4.097 விழுக்காடு என்ற மிகச்சொற்ப அளவிலேயே அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இருக்கும். இதனால் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டிற்கு ஆண்டிற்குச் சுமார் ரூ.5000 கோடி நிதி இழப்பு ஏற்படும். கோவை, மதுரை மெட்ரோ இரயில், திட்டங்களை முற்றிலுமாக ஒன்றிய அரசு புறக்கணித்து இருக்கிறது.

தொடர்ந்து தமிழ்நாட்டை புறக்கணிக்கும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து, திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், பிப்ரவரி 12ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய, நகரங்களில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும். இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள் மாணவர்கள், பெண்கள் என அனைவரும் பங்கேற்று தமிழ்நாட்டின் உரிமைக் குரலை ஓங்கி ஒலிக்க கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: