திருமணமாகி 2 குழந்தைக்கு தந்தையுடனான காதலை கைவிடுமாறு காலில் விழுந்து கெஞ்சியும் கேட்காததால் கொன்றேன்: நெல்லை மருத்துவ மாணவி கொலையில் கைதான தந்தை கண்ணீர் வாக்குமூலம்

 

சேலம்: சேலத்தில் மருத்துவ மாணவியை கொலை செய்து விட்டு தலைமறைவான தந்தையை போலீசார் கைது செய்தனர். மகளை கொன்றது ஏன் என அவர் கண்ணீர் மல்க வாக்குமூலம் அளித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரை சேர்ந்தவர் வரதராஜன் (51). இவரது மகள் வர்ஷினி (22), சேலத்தில் தங்கியிருந்து ஹோமியோபதி இறுதியாண்டு படித்து வந்தார். கடந்த மாதம் 6ம் தேதி இரவு அவர் தங்கியிருந்த அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், அவரது தந்தை வரதராஜனே மகளை கழுத்தை நெரித்துக்கொலை செய்தது தெரியவந்தது. மாணவி வர்ஷினி, திருநெல்வேலி வி.கே.புரத்தை சேர்ந்த திருமணமாகி 2 குழந்தைகளுக்கான தந்தையான தேக்வாண்டோ மாஸ்டர் சக்திவேல் (42) என்பவரை காதலித்துள்ளார்.

அவருடன் பல இடங்களில் சுற்றி வந்துள்ளார். ஏற்காட்டிற்கு சென்றும் அவருடன் தங்கியுள்ளனர். இதையறிந்த தந்தை வரதராஜன், பலமுறை எச்சரித்தும் வர்ஷினி கேட்கவில்லை. இதனால் கோபமடைந்த அவர், மகளை கொன்றுவிட்டு தலைமறைவானார். அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். மகளை கொலை செய்துவிட்டு, அவர் சென்னை வடபழனி கோயிலுக்கு சென்று சாமிகும்பிட்டு விட்டு, மொட்டையடித்து வெளியே வந்தது வரை போலீசார் நெருங்கி சென்றனர். ஆனால் அவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். தொடர்ந்து தனிப்படை போலீசார் நெல்லை, காசி, ராமேஸ்வரத்தில் தேடி வந்தனர்.

இந்நிலையில் வரதராஜன் நேற்று சேலம் நீதிமன்றத்தில் சரணடைய நண்பருடன் வந்தார். அப்போது ரகசிய தகவலின்பேரில் அவரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்து இரும்பாலை போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் கண்கலங்கினார். அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அதில், ‘‘மிகவும் கஷ்டப்பட்டு மகளை படிக்க வைத்தேன். ஆனால் அவர் எங்களை ஏமாற்றிவிட்டு வயதானவரை காதலித்தார். விட்டுவிடும்படி காலில் விழுந்து கெஞ்சினேன். பிடிவாதமாக மறுத்து விட்டார். இதனால் கோபமடைந்த நான் ஓங்கி அடித்தேன்.

கீழே விழுந்தவுடன் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு அறையில் இருந்து வெளியே வந்துவிட்டேன். அங்கிருந்து சென்னை சென்று, வடபழனி முருகன் கோயிலில் மொட்டையடித்தேன். அதன்பிறகு எங்கே போவது என்று தெரியவில்லை. அங்கிருந்து திருப்பதி சென்று விட்டு பின்னர் திருவண்ணாமலைக்கு வந்தேன். அங்கேயே சுற்றிவந்தேன். மகளை கொன்ற மனஉளைச்சலில் கோர்ட்டில் சரணடைய முடிவு செய்துவிட்டு சேலம் வந்தேன்’ என்றார். தொடர்ந்து அவரை கொலை சம்பவம் நடந்த இடத்திற்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: