மாலகா: சர்வதேச அளவில் புகழ்பெற்ற மாடல் அழகி தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டின் லான்சரோட் பகுதியில் பிறந்த கிறிஸ்டினா பெரெஸ் கல்சென்கோ (21), தனது 14ம் வயதிலிருந்தே மாடலிங் துறையில் தடம் பதித்தார். முன்னாள் கால்பந்து வீரர் நாச்சோ பெரெஸின் மகளான இவர், ஐரோப்பாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய இளம் திறமையாளர்களில் ஒருவராகக் கருதப்பட்டார்.
லண்டன், மாட்ரிட், மிலன் மற்றும் பாரிஸ் போன்ற உலகப் புகழ்பெற்ற நகரங்களில் நடந்த ஆடை அலங்கார அணிவகுப்புகளில் பங்கேற்றதோடு, லூயிஸ் உய்ட்டன் மற்றும் வெர்சேஸ் உள்ளிட்ட சர்வதேச முன்னணி நிறுவனங்களின் விளம்பரங்களில் மின்னினார். இந்நிலையில், கிறிஸ்டினா பெரெஸ் கல்சென்கோ கடந்த 3ம் தேதி வேலஸில் உள்ள அவரது வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரம்பகட்ட விசாரணையில் இவரது மரணத்தில் சந்தேகத்திற்குரிய மர்மம் ஏதுமில்லை என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருடைய மறைவு உலகளாவிய ஆடை அலங்காரத் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது உடல் இறுதிச் சடங்கிற்காக அவர் வளர்ந்த இடமான அஸ்டூரியாஸ் நகருக்குக் கொண்டு செல்லப்பட்டது.
