இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் 69 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் ஷியா சமூகத்தினர் சுமார் 20 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இது பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகையில் 10-12 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இஸ்லாமாபாத்தின் ஷேசாத் பகுதியில் உள்ள இமாம்பர்காஹ் என்ற ஷியா சமூகத்தினர் கூடும் மண்டபத்தில் வழக்கம் போல் மக்கள் கூடியிருந்தனர். மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் 69 பேர் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், 169 பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் சிடிஏ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்கொலை குண்டுதாரி ஆப்கானிஸ்தானுடன் தொடர்புடையவர் என்று இஸ்லாமாபாத் போலீசார் கூறுகின்றனர். டிடிபி தாக்குதல் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இருப்பினும், தெஹ்ரீக்-இ-இன்சாஃப் இன்னும் பொறுப்பேற்கவில்லை. சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இஸ்லாமாபாத்தில் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தலைநகரிலேயே குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
