கோயில் குடமுழுக்கில் யாருக்கும் முதல் மரியாதை அளிக்கக் கூடாது : ஐகோர்ட் அதிரடி

மதுரை: கோயில் குடமுழுக்கில் யாருக்கும் முதல் மரியாதை அளிக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ரத்தினம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ”மதுரை மாவட்டம் மேலப்பனங்காடி கிராமத்தில் உள்ள அய்யனார் கோயில், முனியாண்டி சுவாமி கோயில், அருள்மிகு கருப்பசாமி கோயில், முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கை நடத்துவதற்காக முத்தரையர், மறவர், மற்றும் ஆதி திராவிடர் சமூக உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்க உத்தரவிட வேண்டும்,” என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, “மதுரை மாவட்டம் மேலப்பனங்காடி கிராமத்தில் 5 சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்து சமய அறநிலையத்துறை தகுதியான நபர் ஒருவரை நியமிக்க உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் நபர் ஒருவரும் நியமிக்கப்பட்டார். இதனிடையே, ராஜேஷ் கண்ணன் என்பவர் குடமுழுக்கு நடத்த உரிமை கோரி உள்ளார். ஆனால் குடமுழுக்கு என்பது தனி நபரால் நடத்தப்படக்கூடாது.

ஆகவே இந்து சமய அறநிலையத் துறையால் நியமிக்கப்பட்ட நபர், ஒவ்வொரு சமுதாயத்தில் இருந்தும் ஒரு நபரை உறுப்பினராக கொண்ட குழுவை அமைக்க வேண்டும். குழுவோடு இணைந்து குடமுழக்கை நடத்த வேண்டும்.விழாவில் தனி நபருக்கோ அல்லது சமூகத்திற்கோ முதல் மரியாதை வழங்கப்படக்கூடாது. எவ்விதமான பாகுபாடும் இல்லாமல் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Related Stories: