சிக்கிமில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: டார்ஜிலிங் மற்றும் வடவங்காளத்தில் நள்ளிரவில் நில அதிர்வு: மக்கள் பீதி!

காங்டாக்: சிக்கிம் மாநிலம் மற்றும் வடவங்காளத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சிக்கிமின் கியால்ஷிங் பகுதியை மையமாகக் கொண்டு இந்த நில அதிர்வுகள் தொடங்கியுள்ளன. இதன் தாக்கம் அண்டை மாநிலமான மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங், காளிம்பொங், மிரிக் மற்றும் சிலிகுரி போன்ற இடங்களிலும் உணரப்பட்டது. சிக்கிம் மட்டுமின்றி நேபாளம், சீனா மற்றும் திபெத்தின் சில பகுதிகளிலும் இந்த அதிர்வுகள் பதிவாகியுள்ளன.

தேசிய நில அதிர்வு மையத்தின் தகவல்படி, இன்று நள்ளிரவு 1:09 மணியளவில் சிக்கிமின் கியால்ஷிங் பகுதியில் 10 கி.மீ. ஆழத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 4.5 ஆகப் பதிவானது. இதனைத் தொடர்ந்து மிகக் குறுகிய கால இடைவெளியில் அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டன. அதிகாலை 1:15 மணிக்கு கேங்டாக் பகுதியில் 3.1 ரிக்டர் அளவிலும், 2:03 மணிக்கு மங்கன் பகுதியில் 2.5 அளவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2:20 மற்றும் 3:11 மணியளவில் நாம்ச்சி பகுதியில் முறையே 3.9 மற்றும் 4.0 ரிக்டர் அளவில் அதிர்வுகள் ஏற்பட்டன. இடைப்பட்ட நேரத்தில் திபெத் பகுதியிலும் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.

இந்தத் தொடர் நில அதிர்வுகள் மற்றும் பின்விளைவு அதிர்வுகள் காரணமாக வடவங்காளத்தின் மலைப்பிரதேசங்களில் தங்கியிருந்த மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடும் அச்சமடைந்தனர். நள்ளிரவில் உறக்கத்திலிருந்த பலரும் நில அதிர்வை உணர்ந்தவுடன் அலறியடித்துக்கொண்டு ஹோட்டல்கள் மற்றும் வீடுகளை விட்டு வெளியேறி திறந்தவெளிப் பகுதிகளில் தஞ்சம் புகுந்தனர்.

தற்போதைய நிலவரப்படி, இந்த இயற்கைச் சீற்றத்தால் பெரிய அளவிலான உயிர்ச் சேதமோ அல்லது கட்டிடப் பாதிப்புகளோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. இருப்பினும், மிகக் குறுகிய நேரத்தில் வரிசையாக இத்தனை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதை நில அதிர்வு ஆராய்ச்சியாளர்கள் உற்றுநோக்கி வருகின்றனர். மேலும் இதேபோல் மியான்மரில் இன்று காலை 6.03 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவானது.

Related Stories: