ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கியை வட்டியுடன் செலுத்தாவிட்டால் சொத்துகள் ஏலம் விடப்படும்: ஐகோர்ட்டில் வருமான வரித்துறை தகவல்

 

சென்னை: ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கியை வட்டியுடன் செலுத்தாவிட்டால் சொத்துகள் ஏலம் விடப்படும் உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி வழக்கில் 13 கோடி ரூபாயை செலுத்துமாறு அவரது சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபாவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை எதிர்த்து தீபா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மற்றொரு வாரிசான தீபக்கும் வழக்கில் சேர்க்கப்பட்டார்.

வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தீபா தரப்பில், வருமான வரி பாக்கி முதலில் 36 கோடி ரூபாய் என்றும், பின்னர் 13 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சரியான தொகையை தெரிவித்தால் செலுத்த தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வரி பாக்கி குறித்து பதில் மனு தாக்கல் செய்யுமாறு வருமான வரித்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், வருமான வரித்துறை சார்பில், ஜெயலலிதா செலுத்த வேண்டிய வரி பாக்கி குறித்து உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், 2026 ஜனவரி 31 ஆம் தேதி வரையிலான காலகட்டத்திற்கு வருமான வரி பாக்கி, வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 17 ஆயிரத்து 962 ரூபாயும், செல்வ வரி பாக்கி 11 கோடியே 8 லட்சத்து 8 ஆயிரத்து 730 ரூபாயும் செலுத்தப்பட வேண்டும்.

ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபக், 6 கோடியே 75 லட்சத்து 32 ஆயிரத்து 342 ரூபாயை ஆறு தவணைகளாக செலுத்துவதாகக் கூறி, 1 கோடியே 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை செலுத்தியுள்ளது. வரி பாக்கிக்காக, ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே சில சொத்துக்கள் முடக்கப்பட்டன. வரி பாக்கியை செலுத்தாவிட்டால், முடக்கப்பட்ட சொத்துக்களை ஏலம் விட சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வருமான வரித்துறை பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது.

Related Stories: