கார் வாங்க ஆன்லைன் லோன் ஆப் மூலம் ரூ.35 ஆயிரம் இழந்த விரக்தி; எம்ஜிஆர்.நகரில் தனியார் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை: செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை

 

சென்னை: கார் வாங்கும் ஆசையில் ஆன்லைன் லோன் ஆப் மூலம் ரூ.35 ஆயிரம் இழந்த விரக்தியில் கல்லூரி மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை ெசய்து கொண்டார். சென்னை நெசப்பாக்கம் நேரு 2வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(47). பிளம்பராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சுபாஷ்(19) என்ற மகன் இருந்தார். சுபாஷ் பல்லாவரத்தில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார். கார் வாங்கும் ஆசையில் ஆன்லைனில் விளம்பரம் பார்த்து அதன் மூலம் ஆன்லைன் லோன் ஆப்பில் ரூ.35 ஆயிரம் கொடுத்தால் ரூ.85 ஆயிரம் தருவதாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

இதை பார்த்த சுபாஷ், அதை உண்மை என்று நம்பி, சிறுக சிறுக சேர்த்த பணத்தில் ரூ.35 ஆயிரத்தை ஆன்லைன் ஆப் மூலம் பேசிய சந்தோஷிடம் பணத்தை ஆன்லைன் மூலம் அனுப்பியுள்ளார். பணத்தை பெற்ற பிறகு சந்தோஷ் என்ற நபர் போன் எடுக்கவில்லை. அதன் பிறகு தான் ஏமாற்றப்பட்டதை சுபாஷ் உணர்ந்தார். பின்னர் சம்பவம் குறித்து அவரது பெற்றோரிடம் நேற்று இரவு சுபாஷ் தெரிவித்துள்ளார். அதற்கு அவரது பெற்றோர் கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுபாஷ் வீட்டின் மாடியில் உள்ள தனது அறைக்கு சென்று கதவை மூடிவிட்டார்.

இரவு உணவு சாப்பிட அவரது பெற்றோர் அறைக்கு வந்த பல முறை கதவை தட்டியும் அவர் திறக்காததால் சந்தேகமடைந்த அவர் கதவை உடைத்து பார்த்த போது, சுபாஷ் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து எம்ஜிஆர்.நகர் போலீசார் மாணவன் சுபாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இஎஸ்ஐசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவன் பயன்படுத்திய செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் லோன் ஆப் விளம்பரத்தால் பணத்தை இழந்த துக்கத்தில் கல்லூரி மாணவன் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: