நாகர்கோவில்: நாகர்கோவிலில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பிப்ரவரி மாதம் 20ம் தேதி நடைபெற உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 19ம் தேதி குமரி மாவட்டம் வருகை தர இருக்கிறார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று வருகிறார். நடந்து முடிந்த திட்டங்களை தொடக்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார். அந்த வகையில் வரும் பிப்ரவரி 19 ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்கிறார்.
அன்று இரவு நாகர்கோவிலில் ஓய்வெடுக்கும் அவர் பிப்ரவரி 20ம் தேதி காலையில் நடைபெறுகின்ற விழாவில் பல கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்குகிறார். மாவட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட புதிய அரசு கட்டிடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார். வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அவர் நேரடியாக வழங்குகிறார். இலவச வீட்டுமனை பட்டாக்களையும் அவர் வழங்க உள்ளார். மொத்தம் சுமார் 25 ஆயிரம் பேருக்குக்கு மேல் நலத்திட்ட உதவிகள் வழங்க திட்டமிடப்பட்டு வருகிறது.
மேலும் மாவட்டத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை மற்றும் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதலமைச்சரின் வருகையையொட்டி மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகள் விழா மேடை அமைக்கும் இடம் தேர்வு பணிகளையும், பயனாளிகள் பட்டியல் இறுதி செய்யும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். ஓரிரு நாட்களில் இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானம் அல்லது கன்கார்டியா பள்ளி மைதானத்தில் விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2024ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவள்ளுவர் சிலை விவேகானந்தர் பாறை இடையே கண்ணாடி இழை இணைப்பு பாலத்தை திறந்து வைத்திருந்தார். இதன் தொடர்ச்சியாக ஓராண்டு இடைவெளிக்கு பின்னர் மீண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குமரி மாவட்டம் வருகை தர உள்ளார். சட்டமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் முதலமைச்சர் குமரி மாவட்டம் வருகை தர இருப்பது திமுகவினரை உற்சாகமடைய செய்துள்ளது.
