சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான சிறுத்தைகள் உள்ளன. இந்த வனப்பகுதி வழியாக தமிழக-கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையை சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது கடந்து செல்வது வழக்கம். இன்று அதிகாலை சத்தியமங்கலத்தில் இருந்து வனப்பகுதி சாலை வழியாக அடர்ந்த வனப்பகுதியில் உள்ள பண்ணாரி அம்மன் கோயிலுக்கு பக்தர்கள் காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பண்ணாரி அம்மன் கோயில் அருகே சாலையோர வனப்பகுதியில் சிறுத்தை ஒன்று ஹாயாக படுத்து கொண்டிருப்பதை பார்த்து காரில் சென்ற பயணிகள் அச்சம் அடைந்தனர். சிறிது நேரம் படுத்திருந்த சிறுத்தை பின்னர் மெதுவாக எழுந்து வனப்பகுதிக்குள் சென்றது. சாலையோரம் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
