சத்தியமங்கலம்: தாளவாடி மலைப்பகுதியில் இரவு நேரத்தில் விளைநிலங்களில் புகுந்து சேதப்படுத்தும் காட்டு யானைகளை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் உள்ள கிராமங்களில் விவசாயிகள் வாழை, கரும்பு மற்றும் காய்கறி பயிர்கள் பயிரிட்டுள்ளனர். இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் விவசாய தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் சம்பவம் சமீப காலமாக அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மல்லன்குழி, திகினாரை, எரஹனள்ளி, மெட்டல்வாடி கிராமங்களில் காட்டு யானைகள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவதும், விவசாயிகள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு வனத்துறையினருடன் இணைந்து விடிய விடிய கண்விழித்து யானைகளை வனப்பகுதிக்கு விரட்டும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். தினமும் இரவில் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து பயிர்களுக்கு சேதம் ஏற்படுத்துவதால் யானைகளால் விவசாயிகளுக்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது.
யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறாமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாளவாடி மலைப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
