கோவா கப்பல் கட்டும் தளத்திற்குச் சென்று, படகுகள் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் எ.வ.வேலு

 

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் மூன்று நவீன புதிய பயணிகள் படகுகள் கொள்முதல் செய்து இயக்குவதற்கு, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, கோவா கப்பல் கட்டும் தளத்திற்குச் சென்று, படகுகள் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார். 31.12.2024 அன்று கன்னியாகுமரியில் நடைபெற்ற அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சியின்போது, முதலமைச்சர், “முக்கடல் சங்கமிக்கும் குமரிமுனையில் இருந்து அய்யன் திருவள்ளுவர் சிலையை பார்ப்பதற்குச் சுற்றுலாப் பயணிகள் எளிதாக சென்றடையும் வகையில், படகு சவாரி வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் மூன்று புதிய பயணிகள் படகுகள் வாங்கப்படும்” என அறிவித்தார்.

இந்த மூன்று படகுகளுக்கும் பெருந்தலைவர் காமராசர், மார்சல் நேசமணி, ஜி.யு. போப் ஆகியோரின் பெயர்கள் சூட்டப்படும் என்றும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார். தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் நிதியில் மூன்று புதிய பயணிகள் படகுகள் வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, கோவாவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் இதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று கோவா கப்பல் கட்டும் தளத்திற்குச் சென்று அங்கு நடைபெற்று வரும் (Synergy Shipyard, Goa) படகு கட்டுமானப் பணிகளை களஆய்வு செய்தார்.

முதலாவதாக, பெருந்தலைவர் காமராசர் பெயரிடப்பட்ட பயணியர் படகு கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. விரைவில் இதற்கான வெள்ளோட்டம் மற்றும் சோதனை ஓட்டம் (Sea Trial) நடைபெற இருக்கிறது. 2026 பிப்ரவரி மாத இறுதிக்குள் கன்னியாகுமரி துறைமுகத்தில், தமிழ்நாடு கடல்சார் வாரியத்திடம் பெருந்தலைவர் காமராசர் பெயரிட்ட முதல் பயணியர் படகினை ஒப்படைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட இருக்கிறது. மீதமுள்ள “மார்சல் நேசமணி, ஜி.யு.போப்“ ஆகிய இரண்டு படகு கட்டுமானப் பணிகளை விரைவில் நிறைவு செய்துதருமாறு கட்டுமான நிறுவன அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்கள்.

இந்த களஆய்வின்போது, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைச் செயலாளர் இரா. செல்வராஜ், தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் முதன்மைச் செயலாளர் / துணைத் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் தி.ந.வெங்கடேஷ், மாநில துறைமுக அலுவலர் கேப்டன் ம.அன்பரசன் மற்றும் நெடுஞ்சாலைதுறையின் சிறப்பு அலுவலர் (தொழில்நுட்பம்) இரா.சந்திரசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: