செஞ்சி அருகே பாக்கம்-கெங்கவரம் பகுதியில் வனவிலங்கு சரணாலயம் அமைக்க அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

 

சென்னை: செஞ்சி அருகே பாக்கம் – கெங்கவரம் பகுதியில் வனவிலங்கு சரணாலயம் அமைக்க அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பாக்கம் – கெங்கவரம் காப்புக்காடு 1897ம் ஆண்டு காப்புக்காடாக அறிவிக்கப்பட்டது. இக்காடு கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகும். 7 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவு கொண்ட இக்காட்டில் சிறுத்தை, கரடி, அரியவகை சிலந்திகள், அழிந்துவரும் நிலையில் உள்ள பாம்புகள், பெரிய அணில், லங்கூர் குரங்குகள், எறும்பு திண்ணி, தங்கப்பல்லி, புல்புல் ரேசர் ஸ்னேக் என்கிற அரியவகை பாம்பு, 15 குடும்பங்களைச் சேர்ந்த 56 வகை பாம்புகள், தவளைகள், தேரைகள் உள்ளது என்று உள்நாட்டு பல்லுயிர் பாதுகாப்பு அமைப்பு கண்டறிந்துள்ளது.

இந்த அமைப்பை சேர்ந்த ராமன், விமல்ராஜ் ஆகியோர் செஞ்சி அருகே பாக்கம் மலைகளில் கடந்த 8 மாதங்களாக வன உயிரினங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள் அரியவகை சிலந்தி பூச்சியை கண்டறிந்தனர். மேலும் இக்குழுவினர் சானிவீரன், மலைபூவரசு போன்ற 21 வகை செடிகள், மரங்கள், பச்சை சட்டித்தலைபாம்பு என்கிற அரியவகை பாம்பு உள்ளிட்டவைகளை கண்டறிந்துள்ளனர். 2019ம் ஆண்டு இப்பகுதியை வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கவேண்டும் என்று அரசுக்கு தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

இது குறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது, வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972, அட்டவணை 1-ன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள அழிந்துவரும் உயிரினங்களின் அடிப்படைத்தரவுகளை சேகரிப்பதன் மூலம், பாதுகாப்பு உத்தியை வகுக்க இந்த ஆய்வு உதவும். வன விலங்கு சரணாலயம் அமைப்பது குறித்து ஏற்கனவே திட்டமதிப்பீடும், சில தொழில்நுட்ப தகவல்களை அரசு கேட்டு கொண்டதின் பேரில் அனுப்பப்பட்டுள்ளது என்றனர். எனவே நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து பேசி முடிவெடுத்து வருகின்ற சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பாக்கம் – கெங்கவரம் பகுதியில் வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்படும் என அறிவித்து அழிந்துவரும் வனவிலங்குகளையும், இயற்கையையும் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: