திண்டுக்கல்: கரூரில் 41 பேர் இறந்த சம்பவத்தில் எட்டிப் பார்க்காத விஜய், 7 கோடி மக்களை எப்படி காப்பாற்றப் போகிறார் என அமைச்சர் ஐ.பெரியசாமி கேள்வி எழுப்பியுள்ளார். திண்டுக்கல்லில் இன்று அவர், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வருவார். விஜய் அரசியலில் என்ன செய்யப் போகிறார் என்ற கருத்தை சொல்லவில்லை.
வீட்டில் முடங்கி இருக்கிறார். அவர் தேர்தலில் நிற்கட்டும் பின் பார்ப்போம். சினிமா கவர்ச்சி மக்கள் மத்தியில் எடுபடாது. இந்தியாவில் தலைசிறந்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார். திமுகவிற்கு 70 சதவீதம் மக்களின் ஆதரவு உள்ளது.
மேலும், எம்ஜிஆராக இருந்தாலும், யாராக இருந்தாலும், எந்த இயக்கமாக இருந்தாலும் அரசியல் ரீதியாக விமர்சிப்போம். திமுகவை முன்னாள் முதல்வர் அண்ணா, கருணாநிதி வளர்த்ததை போல், தற்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் அதைவிட அதிகமாக வளர்த்து வருகிறார். கரூர் சம்பவத்திற்கு எட்டிப் பார்க்காத விஜய் மக்களுக்கு என்ன செய்யப்போகிறார். தமிழக வரலாற்றில் கூட்ட நெரிசலில் 41 பேர் தண்ணீர் இல்லாமல் இறந்த நிலையில், அவர்களை வந்து பார்க்க மனமில்லாத விஜய் எப்படி 7 கோடி மக்களை காப்பாற்றப் போகிறார்.
ஏதோ நடித்துப் பார்க்கிறார்; டான்ஸ் ஆடிப் பார்க்கிறார். இந்த டான்ஸ் பழைய டான்ஸ்; இந்த டப்பாங்குத்து நம்ம ஊரிலும் ஆடலாம். தேர்தலில் எங்கள் கூட்டணி தான் மிகப்பெரிய வெற்றி பெறப்போகிறது. சட்டமன்ற தேர்தல் முடிந்ததும் பஞ்சாயத்து தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என அனைத்திலும் திமுகவே வெல்லும். நான்கு ஆண்டு காலமாக மக்களை சந்திக்காத எடப்பாடியை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்றார். அவரிடம் நிருபர்கள் ஓபிஎஸ் திமுகவில் இணைந்தால் ஏற்றுக் கொள்வீர்களா என்று கேள்வி எழுப்பினர். அதை முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார் என்றார் ஐ.பெரியசாமி.
