சென்னை : பாஜக தேர்தல் பொறுப்பில் இருந்து விலகுவதாக அண்ணாமலை திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு சுற்றுப்பயண பொறுப்பாளர்களை நியமித்து அறிவித்தார். அதன்படி, ஒவ்வொரு பொறுப்பாளருக்கும் 2 முதல் 7 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட்டிருந்தன.அதில், அண்ணாமலைக்கு கோவை சிங்காநல்லூர், மதுரை தெற்கு, சென்னை விருகம்பாக்கம், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், குமரி மாவட்டம் பத்மநாபபுரம் ஆகிய 6 தொகுதிகளுக்கு சுற்றுப்பயண பொறுப்பாளர் பணி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்தப் பொறுப்பிலிருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். இது தொடர்பாக கோவையில் இன்று (பிப்.3) காலை செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை,” வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்று தெரியவில்லை. அதற்கு காலம் தான் பதில் சொல்லும். கட்சி மேலிடம் முடிவு செய்யும். மேலும், எனது தந்தை உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சையில் உள்ளதால் அவரை கவனிக்க வேண்டி உள்ளது. எனவே சிங்காநல்லூர், காரைக்குடி உள்ளிட்ட 6 தொகுதிகளின் பாஜக தேர்தல் சுற்றுப்பயண பொறுப்பாளர் பணியிலிருந்து நான் விலகுகிறேன். இது குறித்து கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரனிடமும் தெரிவித்திருக்கிறேன்,” இவ்வாறு தெரிவித்தார்.
தேர்தல் பொறுப்பில் இருந்து அண்ணாமலை விலகியதன் மூலம் தமிழ்நாடு பாஜகவில் நிலவி வரும் கோஷ்டி பூசல் அம்பலம் ஆகியுள்ளது. மாநில தலைவராக இருந்த தன்னை ஒரு சில தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் பொறுப்பாளராக போடுவதா என்ற அதிருப்தியில் பொறுப்பில் இருந்து அண்ணாமலை விலகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம், நயினார் நாகேந்திரனுடனான மோதலால் தேர்தல் பொறுப்பில் இருந்து அண்ணாமலை விலகுவதாகவும் கூறப்படுகிறது.
