×

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதக்கலவரச் சூழல் இருந்ததால் 144 தடை பிறப்பிக்கப்பட்டது: ஐகோர்ட் கிளையில் கலெக்டர் பதில் மனு

மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதக் கலவரம் ஏற்படும் சூழல் இருந்ததால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என ஐகோர்ட் கிளையில் கலெக்டர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. மதுரை, திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கிரி, கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் ரவீந்திரன், வீராகதிரவன் ஆஜராகி, மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர் மற்றும் கோயில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன் தரப்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

கலெக்டர் தரப்பில் தாக்கல் செய்த பதில்மனுவில், ‘‘அப்போதிருந்த சூழலை கருத்தில் கொண்டே 163 தடை (144 தடை) உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சட்டம் – ஒழுங்கு மற்றும் அமைதியை கருத்தில் கொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன். காவல்துறையினரை தவறான வார்த்தைகளில் தாக்கி, பேரிகார்டுகளை தூக்கி எறிந்து பிரச்னை செய்தனர். பக்தர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே 163 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மதக்கலவரம் ஏற்படும் சூழல் இருந்ததாக தகவல் கிடைக்கப் பெற்றது’’ என கூறப்பட்டிருந்தது.

மூத்த வழக்கறிஞர் கிரி ஆஜராகி, ‘‘ஆயிரக்கணக்கானோர் மலையேற முயன்றதால் நிலைமை கட்டுப்பாட்டை மீறி சென்றது. கூட்டத்தை கட்டுப்படுத்தவே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்றத்தை அவமதிக்கும் எண்ணம் அதிகாரிகளுக்கு இல்லை. எனவே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கைவிட வேண்டும்’’ என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘‘நான் தினமும் செய்தித்தாள்கள் வாசிக்கிறேன். சம்பவத்தன்று ஒரு காவல் அதிகாரி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்ள தயார் என கூறியதாக படித்தேன். யார் அந்த அதிகாரி? நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராக அதிகாரிகள் புன்னகையுடன் வருகின்றனர்’’ என்றார். இதற்கு அரசுத் தரப்பில், ‘‘பதற்றமான சூழலில் யாராவது அப்படி பேசியிருக்கலாம். இதற்கு மன்னிப்பு கோருகிறோம்’’ என கூறப்பட்டது.

பின்னர் நீதிபதி, ‘‘இந்த வழக்கில் மற்றவர்கள் மேல்முறையீடு செய்ததை ஏற்கலாம். ஆனால், கோயில் செயல் அலுவலர் மேல்முறையீடு செய்ததை எப்படி ஏற்க முடியும். நான் ஒரு தீர்ப்பு வழங்கிய பிறகு அதை எதிர்த்து கலெக்டர் எப்படி தடை விதிக்க முடியும்? கலெக்டருக்கு அறிவு எங்கே போனது?’’ என்றார். அதற்கு அரசு தரப்பில், ‘‘ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் யார் மீது பழி விழும்’’ என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதி, ‘‘அடுத்த விசாரணையின்போது கலெக்டர் மட்டும் ஆஜராக வேண்டும். மற்றவர்களை மன்னிக்கலாம் என்பதால் அவர்கள் ஆஜராகத் தேவையில்லை’’ எனக் கூறி விசாரணையை மார்ச் 2ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Tags : Thiruparankundram ,Madurai ,Judge ,G.R. Swaminathan ,Thiruparankundram hill ,Madurai… ,
× RELATED 2026-27 நிதியாண்டில் தெற்கு ரயில்வேக்கு ரூ.7,611 கோடி ஒதுக்கீடு