×

2026-27 நிதியாண்டில் தெற்கு ரயில்வேக்கு ரூ.7,611 கோடி ஒதுக்கீடு

சென்னை: 2026-27 நிதியாண்டில் தெற்கு ரயில்வேக்கு ரூ.7,611 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 2014ம் ஆண்டு முதல் தமிழகத்தில் மட்டும் சுமார் 1,350 கி.மீ நீளத்திற்கு புதிய ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தூரமானது அண்டை நாடான இலங்கையின் ஒட்டுமொத்த ரயில்வே வலையமைப்பின் நீளத்திற்கு இணையானது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ரயில் சேவை சென்றடைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2009-14 காலகட்டத்தில் தமிழகத்திற்கு ஆண்டு சராசரி பட்ஜெட் ஒதுக்கீடு வெறும் ரூ.879 கோடியாக மட்டுமே இருந்தது. ஆனால், தற்போது 2026-27 நிதியாண்டில் இது 9 மடங்கு உயர்ந்து ரூ.7,611 கோடியாக வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது ரூ.35,701 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்த தமிழகத்தில் 77 ரயில் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ரூ.3,147 கோடி முதலீட்டில் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன.

சிதம்பரம், ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை, மன்னார்குடி உள்ளிட்ட 18 ரயில் நிலையங்களில் முதற்கட்ட பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. தற்போது பொள்ளாச்சி சந்திப்பில் இரண்டாம் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. தமிழகத்தில் தற்போது தலா 9 ஜோடி வந்தே பாரத் மற்றும் 9 ஜோடி அமிர்த் பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன, இது மாநிலத்தின் இணைப்புச் சங்கிலியை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
தமிழகம் தற்போது 97% மின்மயமாக்கல் இலக்கை எட்டியுள்ளது. 2014-க்குப் பிறகு 2,386 கி.மீ தூரம் மின்மயமாக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான பயணத்திற்காக 769 மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டுள்ளன. விபத்தில்லா பயணத்தை உறுதி செய்யும் ‘கவாச்’ பாதுகாப்பு அமைப்பு மொத்தம் 481 கி.மீ தூரத்திற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதில் 427 கி.மீ தூரத்திற்கான டெண்டர் மற்றும் கட்டுமானப் பணிகள் தற்போது முன்னேற்றத்தில் உள்ளன.

Tags : Southern Railway ,Chennai ,Tamil Nadu ,
× RELATED திருப்பரங்குன்றம் விவகாரத்தில்...