×

எஸ்ஐ தேர்வு முடிவுகள் திரும்ப பெற்றது ஏன்? விரிவாக அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: தென்காசியைச் சேர்ந்த குருசாமி, ஆனந்தராஜா ஆகியோர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழ்நாடு காவல் துறையில் காலியாகவுள்ள 299 எஸ்ஐ பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த டிச. 21ல் நடந்தது. பிரிவு பி பகுதியில் பாடத்திட்டத்தில் குறிப்பிட்டபடி தமிழ் வினாக்கள் இல்லை. அதற்கு பதிலாக உளவியல் பகுதியில் இருந்து 10 வினாக்கள் கூடுதலாக கேட்கப்பட்டுள்ளன. இது ஏற்கத்தக்கது அல்ல. எனவே, எஸ்ஐ தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தும், தேர்வை ரத்து செய்து புதிதாக தேர்வு நடத்துமாறும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தனர். இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, ‘‘தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் தவறு நடந்துள்ளது. இதனால், வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகள் திரும்ப பெறப்பட்டது’’ என்றார். இதையடுத்து நீதிபதி, ‘‘தேர்வு முடிவை திரும்ப பெற்றதற்கான காரணம் குறித்து சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு (பிப். 4) தள்ளி வைத்தார்.

Tags : HC ,Madurai ,Gurusamy ,Anandaraja ,Tenkasi ,Tamil Nadu Police Department ,
× RELATED 2026-27 நிதியாண்டில் தெற்கு ரயில்வேக்கு ரூ.7,611 கோடி ஒதுக்கீடு