×

மாமல்லபுரத்தில் ரூ.100 கோடியில் சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில், தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு – 2026ஐ முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது: தலைநகர் சென்னையில் மெரினா கடற்கரை தொடங்கி, மாமல்லபுரம் – வேடந்தாங்கல் – ஊட்டி – கொடைக்கானல் – தஞ்சை பெரியகோயில் – கங்கைகொண்ட சோழபுரம் – செஞ்சிக் கோட்டை என்று குமரி வள்ளுவமுனையில் வானுயர்ந்து நிற்கும் அய்யன் வள்ளுவர் சிலை வரைக்கும் தமிழ்நாட்டில் ஏராளமான சுற்றுலா தலங்கள் இருக்கிறது.

இயற்கை எழில் – வியக்க வைக்கும் கட்டிடக் கலை – தலைநிமிர வைக்கும் கோபுரங்கள் – வரலாற்று பெருமிதத்தை எடுத்துச் சொல்லக்கூடிய இடங்கள் என்று, நிறைய இடங்கள் இருக்கிறது. பொதுவாக, நாம் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும்போது, பெரும்பாலான நாடுகளில், தங்களின் பாரம்பரிய கலைகள் என்று சில கலைநிகழ்ச்சிகளை நடத்தி காட்டுவார்கள். அதுவே, தமிழ்நாட்டை எடுத்துகொண்டால், கரகாட்டம் – காவடியாட்டம் – ஒயிலாட்டம் – மயிலாட்டம் – தெருக்கூத்து – தப்பாட்டம் – பரதநாட்டியம் என்று ஏராளமான கலைகள் இருக்கிறது.

அதேபோல், நம்முடைய பண்பாட்டு அடையாளமான ஏறுதழுவுதல் உள்ளிட்ட விளையாட்டுகளும், சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்த கலைகளையும் – கலைஞர்களையும் – நம்முடைய பண்பாட்டையும் உலகளவிற்கு கொண்டு சேர்க்கும் வலிமை, சுற்றுலா துறைக்குதான் இருக்கிறது. தமிழ்நாட்டில் சுற்றுலா துறையை மேம்படுத்த வேண்டும் என்று, நம்முடைய திராவிட மாடல் அரசில் ஏராளமான முன்னெடுப்புகளை நாம் எடுத்திருக்கிறோம், செய்து கொண்டிருக்கிறோம்.

இந்த சுற்றுலா துறையில் செய்யப்பட்டிருக்கும் சாதனைகளில் முக்கியமானவற்றை சொல்ல வேண்டும் என்றால்,
* கீழடி அருங்காட்சியகம் – பொருநை அருங்காட்சியகம் – கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் போன்ற முத்திரை திட்டங்கள் மட்டுமல்லாமல்,
* கன்னியாகுமரியில் உள்ள அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு கண்ணாடி பாலம் அமைத்திருக்கிறோம், 3டி லேசர் தொழில்நுட்பத்துடன் ஒளியூட்டி இருக்கிறோம்.

கடந்த 5 ஆண்டுகளில், சுற்றுலாத் துறையின் மேம்பாட்டிற்காக, ரூ.612 கோடியே 18 லட்சம் ஒதுக்கியிருக்கிறோம். இதன் ரிசல்ட் என்ன தெரியுமா? கடந்த 5 ஆண்டுகளில், 128 கோடியே 97 லட்சம் உள்நாட்டு சுற்றுலா பயணிகளும், சுமார் 45 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார்கள். ஆனால், இது போதாது. தமிழ்நாட்டை நோக்கி சுற்றுலா பயணிகள் இன்னும் அதிகமாக வர வேண்டும். சுற்றுலா வணிகத்தில் அதிகமான தனியார் முதலீடுகளை ஈர்ப்பது – இந்தியாவின் சிறந்த சுற்றுலா முதலீட்டு தலமாக தமிழ்நாட்டை நிலைநிறுத்துவது – தனியார் முதலீட்டாளர்கள், சுற்றுலா நடத்துபவர்கள், மேம்படுத்துபவர்கள் மற்றும் தொழில்துறை பங்குதாரர்களை ஒரே தளத்தின்கீழ் அரசுடன் ஒன்றிணைப்பது மற்றும் வருவாய் வழிகளை விரிவுபடுத்தும் புதுமையான சுற்றுலா தயாரிப்புகள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களை ஊக்குவிப்பது ஆகிய இந்த மாநாட்டின் நோக்கங்கள் நிறைவேறக்கூடிய வகையில் எல்லோரும் துணை நிற்க வேண்டும்.
இந்த மாநாட்டின் முக்கியமான மூன்று அறிவிப்புகளை நான் வெளியிட விரும்புகிறேன்.
முதல் அறிவிப்பு – அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ‘தமிழ் பினாலே’ நடத்தப்படும்.

இரண்டாவது அறிவிப்பு – மாமல்லபுரத்தில் ‘சிறப்பு பகுதி மேம்பாட்டு ஆணையம்’ அமைத்து, அதன்மூலமாக, ரூ.100 கோடி மதிப்பீட்டில், உலக தரத்தில், நவீன சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
மூன்றாவது அறிவிப்பு – 2023ம் ஆண்டு சுற்றுலா கொள்கை அறிவிப்பை அடிப்படையாகக் கொண்டு, சிப்காட் நிறுவனம் சுற்றுலா தலங்களை கண்டறிந்து, முதலீடுகளை ஈர்த்து, புதிய சுற்றுலா வசதிகளை உருவாக்கவுள்ளது.
இதன் முதற்கட்டமாக, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நான்கு சிறப்பு சுற்றுலா இடங்கள் அடையாளம் கண்டறியப்பட்டு, முதலீடுகளை ஈர்க்க விருப்பப்பதிவு கோரிக்கைகள் அழைக்கப்பட்டிருக்கிறது. அடுத்து, இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு முழுவதும் 31 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இவை, நகர்ப்புற சுற்றுலா, சிறப்பு அனுபவ சுற்றுலா, பெரிய சுற்றுலா மையங்கள் என்று பிரிக்கப்பட்டு, இதில் தங்குமிடங்கள், தீம் பார்க்குகள், கேம்பிங் சைட்ஸ், இயற்கை அனுபவ தங்குமிடங்கள் ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளது. இதனால், தமிழ்நாடு முழுவதும் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Mamallapuram ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Tamil Nadu Global Tourism Summit ,Mamallapuram, Chengalpattu district ,Marina Beach ,Chennai, ,Vedanthangal ,Ooty ,Kodaikanal ,
× RELATED 2026-27 நிதியாண்டில் தெற்கு ரயில்வேக்கு ரூ.7,611 கோடி ஒதுக்கீடு