சென்னை: தேடுதல் குழுக்களின் செயல்பாடு மற்றும் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு லோக்பவன் சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பல்கலைக்கழக மானியக் குழுவின் ஒழுங்குமுறைகள், துணைவேந்தர் பதவிக்கு நியமனம் செய்வதற்கான பெயர்ப் பட்டியலைப் பரிந்துரைக்கும் தேடுதல் குழுக்களில் பல்கலைக்கழக மானியக்குழுவின் தலைவரின் ஒரு பிரதிநிதி இடம்பெற வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறது. பல்கலைக்கழக மானியக்குழுவின் ஒழுங்குமுறைகளுக்கு முரணாக அமைக்கப்பட்ட ஒரு தேடுதல் குழுவின் பரிந்துரையின் பேரில் செய்யப்படும் எந்தவொரு துணைவேந்தர் நியமனமும் தொடக்கத்திலிருந்தே செல்லாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் ஆளுநர் மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுகிறார். தேடுதல் குழுக்களால் பரிந்துரைக்கப்பட்ட 3 பேரை கொண்ட பட்டியலில் இருந்து வேந்தரால் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
அரசாங்கம் ‘தமிழ்நாடு சட்டம் எண் 16/2025’ மூலம் பல்கலைக்கழகச் சட்டங்களில் சில திருத்தங்களைச் செய்தது. அதில் ‘வேந்தர்’ என்ற வார்த்தைக்கு பதிலாக ‘அரசு’ என மாற்றப்பட்டது. எனவே, இனிமேல் மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் அரசாங்கத்திடம் இருக்கும். இந்தச் சட்டம் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை வேந்தரிடமிருந்து எடுத்து அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது. மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக்குழுவின் தலைவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு உறுப்பினரை சேர்ப்பதைக் கட்டாயமாக்கும் 2018ம் ஆண்டு யுஜிசி ஒழுங்குமுறைகளின் விதி 7.3ன் துணைப்பிரிவு-2 ஆனது, 1956ம் ஆண்டு பல்கலைக்கழக மானியக்குழு சட்டத்திற்கு முரணானது என்றும், அது மாநில பல்கலைக்கழகச் சட்டங்களைக் கட்டுப்படுத்தாது என்றும் அறிவிக்கக்கோரி அரசு தனது மனுவில் திருத்தம் செய்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு எதிராக, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு விடுப்பு மனுவை தாக்கல் செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுகள் தொடர்ந்து நடைமுறையில் உள்ளன. துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான நடைமுறையில் உள்ள யு.ஜி.சி. விதிமுறைகள், 2018ன் கீழ் கட்டாய தேவையாக உள்ள பல்கலைக்கழக மானியக்குழுவின் தலைவரின் பிரதிநிதி இல்லாமல் இந்த குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்படுவது ஒரு தீவிரமான கவலைக்குரிய விஷயமாகும்.
இந்த வழக்குகள் நிலுவையில் இருந்தபோதிலும், தேடுதல் குழுக்களின் பதவிக்காலத்தை நீட்டித்து, துணைவேந்தர் பதவிக்கு நியமனம் செய்வதற்கான பெயர் பட்டியலைப் பரிந்துரைக்க வருகிற மார்ச் மாதம் 21ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கி கடந்த ஆண்டு (2025) டிசம்பர் 22ம் தேதியன்று அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்காக அரசால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தேடுதல் குழுக்கள், துணைவேந்தர் தேர்வுக்காக குறுகிய பட்டியலில் உள்ள வேட்பாளர்களுடன் முறையே கடந்த மாதம் (ஜனவரி) 24 மற்றும் 27ம் தேதிகளில் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளன.
நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, குறிப்பாக இடைக்கால உத்தரவுகள் நடைமுறையில் இருக்கும்போது எடுக்கப்படும் நிர்வாக நடவடிக்கைகள், ‘லிஸ் பென்டென்ஸ்’ கோட்பாட்டின்கீழ் வரும் என்று லோக்பவன் கருதுகிறது. இந்த சூழ்நிலைகளில், தற்போதைய தேடுதல் குழுக்கள், அதன் தற்போதைய அமைப்பில், தேர்வு செயல்முறையை தொடருவது சட்டப்படி நிலைத்திருக்காது மற்றும் பிணைப்புத்தன்மை கொண்ட நீதித்துறைத் தீர்ப்புகளின் நோக்கத்திற்கு முரணானது. அத்தகைய செயல்முறையின்படி மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கைகளும் செல்லாததாக்கப்பட வாய்ப்புள்ளது. இதுதவிர, இது மாநில அரசுக்கும், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கும் தவிர்க்க முடியாத சட்ட மற்றும் நிர்வாக சிக்கல்களுக்கும் வழிவகுக்கும்.
ஆளுநர்-வேந்தர், தான் முதலில் பரிந்துரைத்தபடி, யு.ஜி.சி. தலைவரின் பிரதிநிதியை துணைவேந்தர் தேடுதல் குழுவில் சேர்ப்பதற்கு உடனடியாக உத்தரவுகளை பிறப்பிக்குமாறு அல்லது இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தால் முடிவுசெய்யப்படும் வரை, அத்தகைய தேடுதல் குழுக்களின் செயல்பாடு மற்றும் துணைவேந்தர்களை தேர்ந்தெடுத்து நியமிப்பதற்கான அனைத்து தற்போதைய நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்திவைக்குமாறு தமிழ்நாடு அரசை கேட்டுக்கொண்டுள்ளார். கவர்னர்-வேந்தர், அரசியலமைப்பு மரபுகள், சட்டத்தின் ஆட்சி, மாநிலப் பல்கலைக்கழகங்களின் சுயாட்சி மற்றும் உயர்கல்வித் தரங்களைப் பேணுவதில் தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
