திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 26ம் தேதி முதல் மார்ச் மாதம் 2ம் தேதி வரை வருடாந்திர தெப்போற்சவம் நடக்க உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர தெப்போற்சவம் பிப்ரவரி 26ம் தேதி முதல் மார்ச் 2 வரை நடைபெறும். இதில் தினந்தோறும் சுவாமியும் தாயாரும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை தெப்பகுளத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளனர். தெப்போற்சவத்தின் முதல் நாளான பிப்ரவரி 26ம் தேதியன்று சீதா ராமர், லட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகியோர் புஷ்கரணியில் 3 சுற்றுகள் வலம் வந்து அருள் பாலிக்க உள்ளனர்.
இரண்டாம் நாளான 27ம் தேதி கிருஷ்ணர் ருக்மனியும், மூன்றாம் நாளான 28ம் தேதி மலையப்ப ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் புஷ்கரணியில் வலம் வர உள்ளனர். தொடர்ந்து 4ம் நாளில் மலையப்ப சுவாமிகள் 5 முறையும், கடைசி நாளான மார்ச் 2ம் தேதி 7 முறையும் சுவாமி வலம் வர உள்ளார். அர்ஜித சேவைகள் ரத்து: தெப்போற்சவம் காரணமாக பிப்ரவரி 26 மற்றும் 27ம் தேதிகளில் சகஸ்ரதீபலங்கரண சேவை, பிப்ரவரி 28ம் தேதி ஆர்ஜித பிரம்மோற்சவம், மார்ச் 1 மற்றும் 2ம் தேதிகளில் சகஸ்ரதீபலங்கார சேவைகளை ரத்து செய்வதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
