‘நிறைவுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை போற்றி யொழுகப்படும்”என்கிறார் வள்ளுவப் பெருந்தகை (குறள் 154). “பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் போற்றும்.”“பொறுமை தந்த பெருமை அதில் மலர்ந்தது தெய்வத்தின் கருணை” என்று பாடுவார், கவியரசர்.சாதனையாளர்களின் வரலாறுகளைப் படித்துப் பார்த்தால் அவர்கள் தங்கள் இலக்கு நோக்கி முன்னேறுவதில் முதன்மைப் பங்கு வகித்தது அவர்களின் பொறுமைப் பண்புதான்.இஸ்லாமிய வாழ்வியல் பொறுமைக்கு மிகுந்த முக்கியத்துவம் தந்துள்ளது. “பொறுமையாளர்களுடன் இறைவன் இருக்கிறான்” என்று உறுதிபட உரைக்கிறது இறுதி வேதம் குர்ஆன்.உலகப்புகழ் பெற்ற மார்க்கப் பேரறிஞர் டாக்டர் யூசுப் அல் கர்ளாவி அவர்கள் தமது ‘இஸ்லாமியக் கல்வி’ எனும் நூலில் பொறுமை குறித்து அற்புதமாகக் கூறியுள்ளார்.
“நமது லட்சியத்தை அடைவதற்கு நாம் கடந்து சென்றிட வேண்டிய காட்டாறுகள் எவ்வளவு அகலமானதாக இருந்தாலும், நாம் பயணம் செய்ய வேண்டிய பாதை எவ்வளவு கரடுமுரடாக இருப்பினும், நாம் எதிர்கொள்ள வேண்டிய எதிரிகள் பண பலத்திலும் படை பலத்திலும் எவ்வளவு வலிமை மிக்கவர்களாக இருந்தாலும், நாம் பயணம் செய்திடும் பாதையில் வழிப்பறிக்காரர்களும் கொள்ளைக்காரர்களும் கொட்டமடித்துக் கிடந்தாலும் நாம் அனைத்தையும் எதிர்கொண்டு பீடுநடை போடுபவர்களாக இருந்திட வேண்டும். இதற்கு நாம் பெற்றிட வேண்டிய முதல் ஆயுதம் பொறுமை ஆகும்.“நாம் நமது இலட்சியப் பயணத்தில் ஈடுபட்டிருக்கும்போது அடுத்தவர்கள் நம்மை ஏளனம் செய்யலாம். பலர் நம்மைப் பாராட்டலாம். ஏளனங்கள் நம்மை எள்ளளவும் தயக்கத்தில் ஆழ்த்திடக் கூடாது. பாராட்டுகள் நம்மைத் தற்பெருமை கொண்டு தருக்கிக் கிடந்திட இடம் தந்திடக் கூடாது. இந்த நேரத்திலும் நமக்கு பக்கபலமாக இருப்பது பொறுமையே ஆகும். பொறுமை ஒன்றே நாம் பயணத்தை மேற்கொள்கின்ற போது ஏற்படுகின்ற ஏளனங்களையும் இழிமொழிகளையும் எதிர்ப்பு களையும் தாண்டிச் செல்ல உதவிடும் படகு.”எத்துணை அருமையான வழிகாட்டுதல்.
கவிஞர் வாலி முதன் முதலாகப் பாட்டு எழுத வந்தபோது பல அவமானங்களைச் சந்தித்ததாக அவரே பலமுறை குறிப்பிட்டுள்ளார். தொடக்க காலத்தில் அவர் ஒரு பாடலை எழுதிக் காட்டிய போது, “இதெல்லாம் ஒரு பாட்டா” என்று இசையமைப்பாளர் நிராகரித்து அவமானப்படுத்தினார்.வாலி அவர்கள் தளர்ந்துவிடாமல் பொறுமையை மேற்கொண்டார். பின்னாளில், “இதெல்லாம் ஒரு பாட்டா” என்று எந்தப் பாடல் நிராகரிக்கப்பட்டதோ அந்தப் பாடல் தமிழ்நாட்டின் பட்டிதொட்டி எங்கும் ஒலித்துக் கவிஞர் வாலியின் புகழை உயர்த்தியது. அந்தப் பாடல் “கொடுத்ததெல்லாம் கொடுத்தான்…”வாலி அவர்களின் வெற்றிக்குக் காரணம் அவர் கடைபிடித்த பொறுமை.இறைத்தூதர் நபிகளார் (ஸல்) கூறினார். “இறைவனுக்கு மிகவும் பிடித்த இரண்டு பண்புகள் பொறுமையும் நிதானமும்.”“பொறுமையைவிடச் சிறந்த விரிவான அருட்கொடை எவருக்கும் கொடுக்கப்படுவதில்லை” என்று நபிகளார் பொறுமையின் பெருமையைச் சிறப்பித்துக் கூறியுள்ளார்.
இடர்களும் சோதனைகளும் வராமல் வாழ்க்கையே இல்லை. பொறுமை எனும் ஆயுதத்தின் மூலம் அந்தத் துன்பங்களுடன் போராடி நாம் வெல்ல வேண்டும். ஒரு சிறிய தோல்வி அல்லது பின்னடைவு ஏற்பட்டதுமே தற்கொலைக்கு முயலும் இன்றைய இளைஞர்கள் ஒரு வினாடி யோசிக்க வேண்டும்.பொறுமை எனும் உயர்பண்பை அவர்கள் தங்களுக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும். “சாதனை புரிய வேண்டும்… வாழ்வில் உயர வேண்டும்” என்கிற துடிப்பு யாருடைய உள்ளத்தில் தீயாய் கனன்று கொண்டிருக்கிறதோ அவர்களுக்குத் தேவையான முதல் பண்பு பொறுமை.பொறுமையை மேற்கொள்வோம். இறையருளைப் பெறுவோம். வாழ்வில் முன்னேறுவோம்.
– சிராஜுல் ஹஸன்
