தெளிவு பெறுவோம்

?எல்லா கோயில்களிலும் சுதர்சனருக்குத் தனிச் சந்நதி உண்டா?
– தேவநாதன், செஞ்சி.

சில கோயில்களில், ஸ்ரீசுதர்சனருக்கு தனிச் சந்நதி உண்டு. திருவரங்கம், மதுரைக்குப் பக்கத்தில் திருமோஹூர் திருத்தலங்களில், ஸ்ரீசுதர்சனருக்கு தனிச் சந்நதி உண்டு. இவரை தரிசித்தாலே பாவங்கள் விலகி புண்ணியங்கள் அதிகரிக்கும். சக்கரத்தாழ்வார் அறுங்கோண சக்கரத்தின் நடுவில் மூன்று நேத்ரங்களுடன், சிரசில் அக்னி க்ரீடம் தாங்கி, பதினாறு கரங்கள் – பதினாறு திவ்யாயுதங்களுடன் சேவை சாதிப்பார்! அவரது திருவுருவின் பின்னால் நரசிம்மர் இருப்பார்! ஒரு ஷட்கோண (அறு கோணம்) சக்கரத்தின் மத்தியில் சக்கரத்தாழ்வாரும், பின்பக்கம் த்ரிகோண (முக்கோணம்) சக்கரத்தின் மத்தியில் யோகநரசிம்மர் அல்லது ஜ்வாலா நரசிம்மரையும் திருமால் ஆலயங்களில் பெருமாளுக்கு வலதுபுற சந்நதிகளிலும் ஒருசேர சேவிக்கலாம்.

?கணவர் இறந்து போன பிறகு அவர் செய்து வந்த பூஜையை மனைவி தொடரலாமா?
– சுகுமாரி, பாலக்கரை – திருச்சி.

கட்டாயம் தொடரலாம். அது அவருக்கு மகிழ்ச்சியைத் தரும். இதைவிட குடும்பத்துக்கு மங்கலம் தரும். இதைவிட நல்ல செயல் இருக்க முடியாது.

?குரு பிரீத்திக்கு என்ன செய்யலாம்?
– ராஜேந்திர பிரசாத், காஞ்சிபுரம்.

வாழைத்தண்டிலிருந்து திரி எடுத்து தினமும் மாலையில் தீபம் ஏற்றுங்கள். தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம் சொல்லுங்கள். குரு மகிழ்ந்து ஆசீர்வதிப்பார்.

?சிரார்த்த தேவதைகளுக்கும், பித்ருக்களுக்கும் இலை போடுவதைப் போல, மகாவிஷ்ணுவுக்கும் இலை போடுகிறார்களே.. என்ன காரணம்?
– ரங்கராஜன், சென்னை.

எல்லா தேவதைகளுக்கும் அந்தர்யாமியாக இருந்து, அந்தந்த விஷயத்தை அவரவர்கள் மூலமாக நடத்துவதற்குக் காரணமாக இருப்பவன் மகாவிஷ்ணு. இதை திருமழிசையாழ்வார்,
“இனியறிந்தேன் எம்பெருமான்!
என்னை –
இனியறிந்தேன் காரணன் நீ, கற்றவை நீ,
கற்பவை நீ நற்கிரிசை நாரணன்நீ
நன்கறிந்தேன் நான்!’’ (நான்முகன்
திருவந்தாதி-96)
– என்று பாசுரத்தில் விளங்குகின்றார்.

யாகங்களைக் காப்பவர் மகாவிஷ்ணு என்பதால் யாக சம்ரக்ஷனன் என்று அவரை அழைப்பர். அதைப்போல சிரார்தத்தை முறையாகக் காப்பாற்றித் தருபவர் என்பதால், சிரார்த்த சம்ரக்ஷனன் என்று அழைப்பர். அதனால், பிதுருக்களுக்கு தெற்கு நுனியாக இலை போட்டால், பெருமாளுக்கு வடக்கு நுனியாக இலை போடுவார்கள். பித்ருக்களின் இலையில் திலத்தை (எள்) போட்டால், மகாவிஷ்ணுவின் இலையில் அட்சதையைப் போடுவார்கள். பித்ருக்களின் இலையில் ஒரு மடங்கு உபச்சாரம் (வெற்றிலைப்பாக்கு, பழம், தட்சனை) வைத்தால், மகாவிஷ்ணுவின் இலையில் இரண்டு மடங்கு உபசாரம் வைப்பார்கள். அங்கு அப்பிரதட்சணமாகச் சுற்றினால், மகாவிஷ்ணுவின் இலையை பிரதட்சணமாகச் சுற்றுவார்கள், இவைகளையெல்லாம் பெரியோர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

?வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்க யாரை வழிபடலாம்?
– பீமா ராவ், பெங்களூர்.

உங்கள் பக்கம் நியாயம் இருந்தால், சிவில் வழக்காக இருந்தால் வராகரையும், கிரிமினல் வழக்காக இருந்தால் சக்கரத்தாழ்வாரையும் வழிபட, நல்லதீர்ப்பு கட்டாயம் கிடைக்கும்.

?சுகப்பிரசவம் நடக்க என்ன ஸ்லோகம் சொல்லலாம்?
– வாணி அருண்குமார், அருப்புக்கோட்டை.

பகவான் கண்ணனை நினைத்துக் கொள்ளுங்கள். “வசுதேவ சுதம் தேவம் கம்ச சாணூர மர்தனம் தேவகி பரமானந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்’’ என்ற ஸ்லோகம் சொல்லுங்கள். திருச்சிராப்பள்ளி தாயுமானவ ஸ்வாமியை பிராத்தனை செய்யுங்கள். அம்பாளை வணங்குபவர்களுக்கு இந்த ஸ்லோகம் உதவும்.
“நமஸ்தேஸ்து ஜகன்மாத: கருணாம்ருத ஸாகரே
கர்ப்ப ரக்ஷாகரி தேவி ஸுகப்ரசவ
மேவஹி!’’
இந்த ஸ்லோகத்தைச் சொல்லி
அம்பிகையை தினமும் வழிபடுங்கள்.
“உயிர்களுக்கெல்லாம் தாயாக இருப்பவளே! கருணைக் கடலாகத் திகழ்பவளே! கருவில் உள்ள உயிரைக் காப்பவளே! சுகப் பிரசவம் நடக்க அருள்புரிவாய்’’ என்பது இந்தச் ஸ்லோகத்தின் பொருள்.

?ஜாதகர்மா என்று ஒரு சடங்கைச் சொல்லுகின்றார்களே? அது எப்பொழுது செய்ய வேண்டும்?
– சிவராமகிருஷ்ணன், ஓசூர்.

ஜாதகர்மா என்றால், குழந்தை பிறந்தவுடன் செய்யவேண்டிய சடங்கு. ஒருவன் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை பலவிதமான சடங்குகள் செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதில், பிறந்த குழந்தைக்குச் செய்யும் முதல் சடங்கு இந்த “ஜாதகர்மாதான்’’ தொப்புள் கொடி அறுப்பதற்கு முன், இந்தச் சடங்கு செய்ய வேண்டும். ஆனால், இப்பொழுது அதற்கான அமைப்போ, அவகாசமோ இல்லை. அதனால் 11ம் நாள் புண்ணியாகவாசனம் செய்து, நாமகரணம் செய்யும்பொழுது, சேர்த்துச் செய்து கொள்கிறார்கள்.

?கலிகாலம் என்றால் என்ன?
– சு.பாலசுப்ரமணியன், ராமேஸ்வரம்.

பொதுவாக தர்மத்திற்கு எதிரான செயல்கள் அரங்கேறும்போது எல்லாம் கலிகாலம் என்று சொல்கின்ற பழக்கம் நம்மையும் அறியாமல் வந்து சேர்ந்திருக்கிறது. கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம் கடந்து தற்போது கடைசியாக கலியுகம் என்பது நடந்து கொண்டிருக்கிறது என்பதை புராணங்களின் வாயிலாக அறிந்துகொள்கிறோம். இந்த யுகத்தில் மக்கள் தங்கள் சுயநலத்திற்காக எதையும் செய்வார்கள், உண்மையும் நீதியும் மறைந்து அநீதியும் கொடுமையும் அதிகரிக்கும், துறவிகள்கூட பொருட்களின் மீது ஆசை கொள்வார்கள். குடும்பத்தில் உறவிற்கான மதிப்பு குறைந்து அன்பும் பாசமும் காணாமல் போகும். பெண்களுக்கான பாதுகாப்பு என்பது குறையும் என்பது போல கலிகாலம் பற்றி வர்ணிக்கப்படுகிறது. இவை அனைத்தும் கலியுகத்தின் அறிகுறிகள் தானே தவிர, கலியுகத்தில் இப்படி அதர்மமாகத்தான் வாழ வேண்டும் என்று விதண்டவாதம் பேசக் கூடாது. இந்த கலியுகத்திலும் தர்மத்தின்படி வாழ்பவனுக்கே இறையருள் என்பது கிடைக்கும்.

?திருப்பதிக்கு வேண்டிக் கொண்டு அந்த வேண்டுதலை நிறைவேற்ற இக்கோயிலில் செய்யலாம் என்று பல கோயில்களிலும் சொல்கிறார்களே, உண்மையா? அப்படிச் செய்யலாமா?
– கு.குருராஜன், திருச்சி.

கூடாது. இதுவும் திருப்பதிக்கு இணையான ஸ்தலம்தான், இங்கும் இந்த இறைவனிடத்தில் வேண்டிக்கொண்டு நீங்கள் அந்த வேண்டுதலை நிறைவேற்றலாம் என்று சொல்லலாமே தவிர, திருப்பதிக்கு வேண்டிக் கொண்ட நேர்த்திக்கடனை இந்த ஆலயத்தில் செலுத்துங்கள் என்று சொல்வதை ஏற்க இயலாது. எந்த ஆலயத்திற்காக வேண்டிக் கொள்கிறோமோ அங்குதான் அந்த நேர்த்திக்கடனை நிறைவேற்ற வேண்டும். இதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

Related Stories: