துவஜ யோகம்!

யோகங்கள் என்பது கிரகங்களின் இணைவுகள் மற்றும் பார்வைகள் என இருந்தாலும் அதற்குள் பல்வேறு நுட்பமான வேறுபாடுகள் உள்ளன. இதனை கிரக ரீதியாகவும் பாவக ரீதியாகவும் பிரித்து பார்த்து அறிந்து கொள்ளலாம். இதில் பலன்களும் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொன்றாக மாறுபாட்டை கொடுக்கும். சில யோகங்கள் மேலோட்டமாக இருக்கும், சில யோகங்கள் ஒரு யோகத்திற்குள் மற்றொரு யோகம் உள்ளே விரிந்திருக்கும் விதைக்குள் உள்ள மரம் போல, இன்னும் சில யோகங்கள் இரண்டு, மூன்று யோகத்திற்குள் இணைந்து மற்றொரு யோகத்தை உருவாக்கும் என்பது சூட்சுமம். இவையெல்லாம் யோகங்கள் என்றாலும், சில யோகங்கள் எல்லோருக்கும் இருக்கும்; சில யோகங்கள் நூற்றில் ஒருவருக்கு அல்லது மூவருக்கு இருக்கும் வாய்ப்புகள் உண்டு; சில யோகங்கள் ஆயிரத்தில் ஒருவருக்கு மட்டும் உண்டு; இன்னும் சில யோகங்கள் லட்சத்தில் ஒருவருக்கு மட்டும்தான் இருக்கும்; அரிதான சில யோகங்கள் மட்டும் கோடியில் ஒருவருக்கு மட்டுமே இருக்கும் பாக்கியம் ஏற்படும். பலன்களும் அவ்வாறே இருக்கிறது. இதில், கோட்சாரத்தில் உள்ள கிரகங்கள் அடிப்படையில் சில மாறுபாடுகளும் சில குறுகிய மற்றும் நீண்ட பலன்களும் வாய்க்கிறது என்பது யோகத்தின் சாரம்சமாகும். அவ்வகையில் இப்பொழுது நாம் பார்க்கும் யோகமும் மிகவும் அரிதான யோகம்தான்.

துவஜ யோகம் என்றால் என்ன?

‘துவஜ’ என்பது சமஸ்கிருத வார்த்தையாகும். இந்த வார்த்தைக்கு ‘கொடி’ என்ற பொருளுண்டு. வெற்றிக்கான கொடியைத்தான் இந்த யோகம் குறிப்பிடுகின்றது. அதாவது, கொடியை பிடித்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக போகும் யோகம் அல்ல. மற்றவர்கள் கொடி ஏந்தி தலைமை தாங்க வைக்கும் சிறப்பான யோகமாகும். இந்த யோகத்தில் ஒரு ஜாதகர் பிறப்பாரேயானால் தேசத்திற்கு தலைமை தாங்கும் பண்பினை உடையவராகத் திகழ்வார் என்பதாகும்.

துவஜ யோகத்திற்குரிய கிரக அமைப்புகள் என்ன?

சுப கிரகங்களான வியாழன், சுக்கிரன், புதன் மற்றும் சந்திரன் ஆகியவை லக்னத்திலும் அசுப கிரகங்களான சனி, ராகு மற்றும் கேது ஆகியவை லக்னத்திற்கு எட்டாம் (8ம்) பாவகத்திலும் இருக்கப் பெற்றால், அதுவே துவஜ யோகம் என ஜோதிட சாஸ்திரம் வலியுறுத்துகிறது. அதிகமான கிரகங்கள் அனைத்தும் இரண்டு பாவகங்களில் பொதிந்து காணப்படும் அமைப்பாகும்.

துவஜ யோகத்தின் சூட்சுமங்கள்

* எட்டாம் (8ம்) பாவகமான வீட்டில் அசுப கிரகங்கள் அமைந்திருந்தால், அது உங்களுக்கு எதிரிகளை வெல்லும் அமைப்பை உருவாக்குகிறது.
* லக்னம் என சொல்லக் கூடிய ஒன்றாம் (1ம்) பாவகத்தில் சுபகிரகங்கள் அமையப்பெறின் உங்களுக்கு நல்ல சிந்தனைகளையும் வெற்றிக்கான சுப நிகழ்வுகளையும் பற்றி விஷயங்கள் உங்களுக்குள் உருவாகிக் கொண்டே இருக்கும்.
* அசுப கிரகங்கள் எட்டாம் பாவகத்தில் அமையப் பெறின் ஆயுள் வளர்க்கும் என சாஸ்திரம் சொல்கிறது.
* எந்த திசா – புத்திகள் வந்தாலும் இரண்டு பாவகங்களில் மட்டுமே தொடர்ந்து இயங்கும். ஆகவே, தொடர்ந்து ஒரே விஷயத்தை செய்து வெற்றியை தனதாக்கிக் கொள்ளும் அமைப்பாகும்.
* இவர்களுக்கு கால சர்ப்பத்தின் தோஷத்தை கொண்ட அமைப்பாக இருக்கும். சில காலங்கள் தொழில் செய்யாமல் இருக்கும் பொழுதும் அச்சமயம் இவர் செய்த தொழில் நேர்த்தியை மற்றவர்கள் பாராட்டும் வண்ணம் இருக்கும்.

துவஜ யோகத்தின் பலன்கள்

* பிறக்கும் பொழுது ஜாதகர் எப்படிப்பட்ட ஏழ்மை நிலையில் இருந்தாலும் முன்னேற்றத்தை நோக்கி பயணித்துக் ெகாண்டே இருப்பார்.
* இவர் சார்ந்த தொழில் துறையை இவருக்கானதாக மாற்றி வெற்றி பெற்று, இவரின் மாறுபட்ட தொழில்நுட்பத்தை மற்றவர்களும் தொடர்வார்கள்.
* இவரின் சிந்தனை முழுதும் வெற்றி சார்ந்தே இருக்கும். புதுப்புது சிந்தனைகளை தொழிலில் புகுத்துவார்.
* எட்டாம் இடத்தில் அதிக கிரகங்கள் இருக்கக் கூடாது. ஆயுள் கண்டங்களை அடிக்கடி சந்திப்பார். ஆகவே, இறை வழிபாடும், கோயில், குளங்களுக்கு திருப்பணிகள் செய்தால் இவருக்கு நன்மைகள் உண்டாகும்.
* மன்னனை போல வாழும் அமைப்பை உடையவராக இருப்பார். பெருமளவில் செல்வங்கள் வரும், வந்து கொண்டே இருக்கும்.
* அடிக்கடி சிற்சில அவமானங்களை சந்திக்க நேரிடக்கூடும். ஆனாலும், இவரின் செயல் மற்றும் சிந்தனைகள் இவரை வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டே இருக்க வைக்கும்.
* அரசனாக இல்லாவிட்டாலும் அரசு இவரை பாராட்டிக் கொண்டே இருக்கும். மக்களின் மனதில் நிரந்தர இடத்தை தனக்கென தக்க வைத்துக்கொள்வார்.

துவஜ யோகத்திற்கான பரிகாரங்கள்

* சில நேரங்களில் இவருக்கு அவமானங்கள் மற்றும் கண்டங்கள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆகவே, கோச்சாரத்தில் 1ம் பாவகம், 8ம் பாவகத்தினுள் ராகு – கேது பயணிக்கும் போது நாகதோஷம் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். பொது மக்கள் மற்றும் பொதுச் சேவைகளை ஆன்மிகம் தொடர்பாக செய்து கொண்டே இருப்பது இவர்களுக்கான கஷ்டங்களை குறைக்கும்.