போபால்: மத்தியப் பிரதேசத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலை கொள்முதலில் கடுகு உள்ளிட்ட சிறுதானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. கொள்முதல் செய்யப்பட்ட தானியங்கள் தேசியப் பொருட்கள் மேலாண்மை சேவைகள் லிமிடெட் நிறுவனத்தின் ஆய்வாளர்களால் தரச் சோதனைகள் அங்கீகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் ரேஹ்லியில் உள்ள ஒரு கிடங்கில் சேமிக்கப்பட்டிருந்த ஒரு கைப்பிடி கடுகு விதைகளை எடுத்து ஆய்வாளர் ஒரு கிண்ணம் தண்ணீரில் போட்டார். சில வினாடிகளில், அந்த விதைகள் உடைந்து கரைந்து, சேறாக மாறத் தொடங்கின.
ஆய்வாளரின் இந்தச் செயல், மத்தியப் பிரதேசத்தின் குறைந்தபட்ச ஆதரவு விலை கொள்முதல் அமைப்பில் நடந்த ஒரு மாபெரும் ஊழலை அம்பலப்படுத்தியது. கொள்முதல் செய்யப்பட்ட கடுகு இருப்பில் 35 முதல் 40 சதவீதம் வரை தானியமே அல்ல, மாறாக உணவுப் பொருள் போல தந்திரமாக மாற்றப்பட்ட களிமண் துகள்கள் என்பது தெரியவந்தது. ரேஹ்லியில் உள்ள கிடங்கில் சேமிக்கப்பட்டிருந்த கடுகு மூட்டையை சட்டீஸ்கர் மாநிலத்தின் ராஜ்நந்துகானில் உள்ள ஒருவர் வாங்குவதற்காக ஏலம் விட்டபோது இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. இருப்பை எடுத்துச் செல்லும்போது, மெஸ்ஸர்ஸ் சிவசக்தி சாகர் டிரேடிங் கம்பெனி என்ற நிறுவனம், விளைபொருளின் பெரும்பகுதி சந்தேகத்திற்கிடமானதாகவும், தரம் குறைந்ததாகவும் இருப்பதாகப் புகார் அளித்தது.
தீவிர விசாரணையில், இரண்டு கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட கடுகில் 257 குவிண்டால் இருப்பில் இருந்தது. அதில் ஒரு குவிண்டாலுக்கு 35-40 சதவீதம் கலப்படம் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது மெகா கொள்ளையை உறுதிபடுத்தி உள்ளது. இதுபற்றி கூட்டுறவு சங்க இயக்குநர்கள், நில அளவையர்கள் மற்றும் அப்போதைய எம்பிஎல்சி கிளை மேலாளர் உட்பட 5 அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடி மூலம் ஒரே ஒரு கிடங்கில் மட்டும் அரசுக்கு சுமார் 1 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
* 2024-25 ரபி பருவத்தில், ஒன்றிய அரசின் குவிண்டாலுக்கு ரூ.2,650 என்ற குறைந்தபட்ச ஆதரவு விலையில், இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பால் கடுகு கொள்முதல் செய்யப்பட்டிருந்தது.
* மோசடி நடந்துள்ள ரேஹ்லி கிடங்கில் மட்டும் ரூ.2.50 கோடிக்கு கடுகு கொள்முதல் செய்யப்பட்டது. இதில் ரூ.1 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
