பெங்களூரு: பெங்களூருவில் தொழிலதிபர் சி.ஜே.ராய், வருமான வரி சோதனையின் போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐடி அதிகாரிகளின் அழுத்தம் காரணமாகத்தான் ராய் தற்கொலை செய்துகொண்டதாக அவரது சகோதரர் பாபு குற்றம்சாட்டியுள்ளார். இந்த வழக்கை விசாரிக்க மாநில அரசு சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்.ஐ.டி) அமைத்து உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பேசிய மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், கடந்த ஆண்டு டிசம்பரில் கேரள மாநில ஐடி அதிகாரிகள் ராயின் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். துபாயில் இருந்த ராய், பெங்களூருவிற்கு வரவழைக்கப்பட்டு ஐடி அதிகாரிகள் தொடர்ச்சியாக 3 நாட்களாக விசாரணை நடத்தி வந்துள்ளனர். ஒரு கேள்விக்கு 5 நிமிடம் கழித்து பதில் சொல்வதாகக் கூறி அறைக்கு சென்ற ராய் 20 நிமிடமாகியும் வராததால் கதவை உடைத்து பார்த்தபோது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை வந்தபின் தான் உண்மை தெரியவரும் என்று கூறினார்.
