×

மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதல்வராக அஜித்பவார் மனைவி சுனேத்ரா பதவியேற்றார்: கவர்னர் மாளிகையில் எளிமையான விழா; சரத்பவார் உள்ளிட்டோர் புறக்கணிப்பு

மும்பை: மறைந்த அஜித்பவாரின் மனைவியும் ராஜ்யசபா எம்பியுமான சுனேத்ரா பவார், மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதல்வராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், மகாராஷ்டிரா துணை முதல்வராகவும் இருந்த அஜித்பவார், ஜில்லா பரிஷத் தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக கடந்த 28ம் பாராமதிக்கு தனியார் ஜெட் விமானத்தில் சென்ற போது, விமானம் கீழே விழுந்து நொறுங்கி பலியானார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவரது இறுதிச்சடங்குகள் 29ஆம் தேதி நடந்தன. 30ஆம் தேதி அவரது அஸ்தி பாராமதியில் உள்ள ஆறுகள் சங்கமத்தில் கரைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் இல்லத்திற்கு சென்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பிரபுல் பட்டேல், சகன் புஜ்பால் உள்ளிட்டோர் சந்தித்து பேசினார். இதை தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேவை தலைவராகவும், மகாராஷ்டிரா துணை முதல்வராகவும் அஜித்பவார் மனைவி சுனேத்ரா பவார் பதவி ஏற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதையொட்டி சுனேத்ரா பவார் நேற்று காலை மும்பை வந்தார். தெற்கு மும்பையில் அஜித்பவாரின் அதிகாரப்பூர்வ இல்லமான தேவ்கிரி வந்தடைந்தார். அவருடன் மகன் பார்த் பவாரும் உடன் வந்தார். பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கட்சியின் செயல் தலைவர் பிரபுல் படேல், மாநில தலைவர சுனில் தட்கரே ஆகியோருடன் பங்கேற்று, ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று மதியம் 2 மணிக்கு விதான் பவனில் நடந்தது. அதில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக சுனேத்ரா பவார் தேர்வு செய்யப்பட்டார்.

அதன் பிறகு, கவர்னர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில், மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதல்வராக சுனேத்ரா பவார் பதவியேற்றார். ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். சுனேத்ரா பவார் பதவியேற்க எழுந்த போது ‘அஜித்பவார் புகழ் என்றும் அழியாது’ என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இந்நிகழ்வில் முதல்வர் பட்நவிஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, என்சிபி தலைவர்களான பிரபுல் படேல், சுனில் தட்கரே மற்றும் சகன் புஜ்பால் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

பதவி ஏற்பு விழாவல் சுனேத்ரா பவாரின் இளைய மகன் ஜெய் பவார் மற்றும் அவரது மனைவியும் பங்கேற்றனர். ஆனால் அஜித்பவாரின் சித்தப்பாவும், தேசியவாத காங்கிரஸ் நிறுவன தலைவருமான சரத்பவார், அவரது மகள் சுப்ரியா சுலே உள்ளிட்டோர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை. தற்போது துணை முதல்வராக பதவியேற்றிருக்கும் சுனேத்ரா பவார், மாநில சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக இல்லை. எனவே தனது எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தனது கணவர் பிரதிநிதித்துவப்படுத்திய பாராமதி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* அஜித்பவாரின் லட்சியங்களை காப்பேன்: சுனேத்ரா உறுதி
மகாராஷ்டிராவின் துணை முதல்வராகப் பதவியேற்ற பிறகு சுனேத்ரா பவார் கூறுகையில்,’மதிப்பிற்குரிய அஜித் தாதா தனது முழு வாழ்க்கையையும் விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் சமூகத்தின் விளிம்புநிலை மக்களுக்கு சேவை செய்வதற்காக அர்ப்பணித்து, அவர்களுக்கு வாழ்வதற்கான வழிகாட்டும் மந்திரத்தை வழங்கினார். அவரின் அகால மரணம் என் இதயத்தில் ஒரு துயர மலையைக் குவித்திருந்தாலும், அவர் கற்பித்த விழுமியங்களை நனவாக்க நான் முழு நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து பணியாற்றுவேன். இந்தக் கடினமான நேரத்தில், மகாராஷ்டிரா மக்கள் காட்டிய அன்பும் ஆதரவும்தான் எனது மிகப்பெரிய பலம். உங்கள் நம்பிக்கையின் பலத்துடன், நான் புதிய நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்வேன், தாதாவின் லட்சியங்களை ஒளிரச் செய்து, நிலைநிறுத்துவேன்’ என்றுகுறிப்பிட்டுள்ளார்.

* நிதித்துறையை பிடுங்கினார் பட்நவிஸ்
புதிய துணை முதல்வராகப் பதவியேற்றுள்ள சுனேத்ரா பவாருக்கு மூன்று துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவை மாநில கலால் வரி, சிறுபான்மையினர் நலன், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் ஆகியவையாகும். அஜித்பவார் வசம் இருந்த நிதித்துறை தற்போதைக்கு முதல்வர் தேவேந்திர பட்நவிசிடமே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* மரணத்திலும் ஆதாயம் தேடும் பாஜ
உத்தவ் சிவசேனா கட்சி எம்பி சஞ்சய் ராவத், ஒருவரது மரணத்தில் கூட பாஜ ஆதாயம் தேடுவதாக கடுமையாக விமர்சித்தார். ‘துக்க காலத்திற்கும் பாஜவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒருவரது மரணத்திலும் கூட பாஜ, ஆதாயத்தை தேடுகிறது. இதைப் பற்றி பேசுவதற்கான நேரம் இது கிடையாது. துக்க காலம் முடிந்த பிறகு இதைப் பற்றி பேசுகிறேன். துணை முதல்வராக சுனேத்ரா பவார் பொறுப்பேற்பது குறித்து எங்கள் யாருக்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லை’ என்று அவர் தெரிவித்தார்.

* எனக்கு எதுவும் தெரியாது: சரத்பவார் பேட்டி
சரத்பவார் கூறியதாவது: பதவியேற்பு விழா பற்றி எங்களுக்குத் தெரியாது. செய்திகள் மூலமாகவே இந்த விஷயத்தை தெரிந்துக் கொண்டோம். தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்திருக்கலாம். இது குறித்து எங்களிடம் கருத்து கேட்கப்படவில்லை. அஜித் பவாரின் மரணத்திற்குப் பிறகு யாராவது அந்தப் பதவியை ஏற்க வேண்டும் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* பிப்.12ல் கட்சியை இணைக்க திட்டமிட்டோம்
தேசியவாத காங்கிரசின் இரு அணிகளும் இணைவது குறித்து பேசிய சரத்பவார், ‘எங்கள் கட்சியைச் சேர்ந்த ஜெயந்த் பாட்டீலும் அஜித்பவாரும் தான் இந்த பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இரு கட்சிகளையும் இணைக்க ஏற்கனவே ஒருமித்த முடிவுகள் எடுக்கப்பட்டது. பிப்ரவரி 12ம் தேதி அன்று அறிவிக்க திட்டமிட்டிருந்தோம். அஜித்பவார் தான் இந்த தேதியை இறுதி செய்தார் ’ என்று கூறினார்.

* ஒரு மனிதனை விட பதவி முக்கியமா?
சிவசேனாவைச் சேர்ந்த அமைச்சர் சஞ்சய் ஷிர்சாத் கூறுகையில், ‘அஜித்பவார் இறந்து இன்னும் சில நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள் துணை முதல்வர் பதவிக்கான பதவியேற்பு விழா நடைபெறுகிறது. உடனே நடத்த வேண்டிய அவசியம் என்ன? இன்னும் தாமதமாகக் கூட நடத்தியிருக்கலாம். கடந்த 2 நாட்களில் நடந்த நிகழ்வுகள் ஒரு மனிதனை விட பதவிக்கே அதிக முக்கியத்துவம் என்பதைக் காட்டுகிறது. ஆனால் சுனேத்ரா பவார் இவ்வளவு சீக்கிரம் மும்பைக்கு சென்றதும், கட்சித் தலைவர்களின் கருத்துகளும் ஏற்க முடியாதது. ஏன் இந்த அவசரம்? பதவியேற்பு விழாவை ஒரு வாரம் கழித்துக் கூட நடத்தியிருக்கலாம். தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஒன்றிணைய இன்னும் கால தாமதமாகும். அஜித்பவார் முன்கூட்டியே இதற்கான ஏற்பாடுகளைச் செய்ததாக இப்போது தான் எல்லாரும் சொல்கிறார்கள். உடனடியாக அது நிகழச் சாத்தியமில்லை’ என்று தெரிவித்தார்.

Tags : Ajitbwar ,Sunetra ,Maharashtra ,Governor ,House ,Saratbwar ,Mumbai ,Sunetra Bawar ,Ajit Bawar ,Rajya Sabha ,Ajit Bhawar ,Nationalist Congress Party ,Deputy Prime Minister ,Zilla ,Parishad ,
× RELATED தமிழ்நாடு உள்பட 5 மாநில தேர்தலையொட்டி...