திருமலை: ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது சொந்த தொகுதியான குப்பத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் பெண்களுக்கு 5,555 இ-சைக்கிள்களை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கட்சியின் முக்கிய தலைவர்களுடன் விருந்தினர் மாளிகையில் இருந்து விழா மேடைக்கு சந்திரபாபு நாயுடு சைக்கிளை ஓட்டி சென்றார். பின்னர் இ சைக்கிள்களை பயனாளிகளுக்கு வழங்கினார். ஒரே நாளில் 5,555 இ-சைக்கிள்களை வழங்கியதற்காக அவர் கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.
இதில் சந்திரபாபு நாயுடு பேசுகையில், ‘கடந்த காலங்களில் ஒரே நேரத்தில் 3,000 இ-சைக்கிள் வழங்கி கின்னஸ் சாதனையில் இடம்பெற்றோம். தற்போது அந்த சாதனையை முறியடித்து 24 மணி நேரத்தில் 5,555 சைக்கிள்களை வழங்கி குப்பத்தில் மீண்டும் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்று வரலாற்றை உருவாக்கியுள்ளோம். வரும் காலங்களில் இ-சைக்கிள்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த இ-சைக்கிள்களுக்கு சூப்பர் சைக்கிள் என்று பெயரிட்டுள்ளோம். இதனால் 60 கி.மீ வரை வேலைக்கு எளிதாகச் செல்லலாம். மாணவர்கள் குறைந்த செலவில் பாதுகாப்பாக பயணிக்க முடியும். இதன் மூலம் ஒரு குடும்பத்திற்கு மாதத்திற்கு ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை மிச்சமாகும். இவ்வாறு அவர் பேசினார்.
