ஊட்டி: கோரகுந்தா மற்றும் அவலாஞ்சி பகுதியில் பூத்துள்ள ரோடோரென்ட் மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நாடுகளில் காணப்படும் மரங்கள் மற்றும் மலர் செடிகள் அதிகளவு காணப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு மரங்கள் மற்றும் தாவரங்களை ஊட்டிக்கு கொண்டு வந்து பயிரிட்டனர். ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் நிலவும் காலநிலை இங்கும் நிலவுவதால், அந்த நாடுகளில் காணப்படும் மரங்கள், தாவரங்கள் மற்றும் மலர்கள் அதிகளவு இங்கு கொண்டு வந்து நடவு செய்யப்பட்டது.
அதே சமயம் நீலகிரி மாவட்டத்திற்கு உரிய சில தாவரங்கள் மற்றும் மரங்களும் உள்ளன. சதுப்பு நிலங்கள் மற்றும் மலை பிரதேசங்களில் காணப்படும் இந்த மரங்களில் அவ்வப்போது சில மலர்கள் பூத்து காணப்படும். குறிப்பாக, அப்பர் பவானி, தொட்டபெட்டா மற்றும் அவலாஞ்சி போன்ற மலைப்பகுதிகளில் ரோடோரென்ட் மரங்கள் அதிக அளவு காணப்படுகின்றன. இந்த மரங்களில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இளஞ்சிவப்பு நேரத்தில் பூக்கள் பூத்து காணப்படும். இதனை அருகில் பார்ப்பதற்கு ரோஜா மலர்களைப்போன்று காட்சி அளிக்கும். தற்போது இப்பகுதிகளில் உள்ள காடுகளில் ரோடோரண்ட் மலர்கள் அனைத்து மரங்களிலும் சிவப்பு நிறத்தில் பூத்துக் குலுங்குகின்றன. இதனை இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் கண்டு ரசிப்பதை மட்டும் இன்றி அதனை புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.
