சென்னை: மெட்ரோ பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 52 மெட்ரோ ரயில்களிலும் இடைநிலை சீரமைப்புப் பணிகள் நிறைவு பெற்றது. இது குறித்து மெட்ரோ நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்; சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் 2015 ஆம் ஆண்டு முதல், நான்கு பெட்டிகள் கொண்ட 52 மெட்ரோ ரயில்களைக் கொண்டு மெட்ரோ ரயில் சேவைகளை இயக்கி வருகிறது. பயணிகளின் பாதுகாப்பு, வசதி மற்றும் நேரந்தவறாமை ஆகியவை சென்னை மெட்ரோவின் முக்கிய முன்னுரிமைகளாகும். இதை உறுதி செய்வதற்காக, அனைத்து மெட்ரோ ரயில்களும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வழக்கமான மற்றும் திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணிகளுக்கு உட்படுத்தப்படுகின்றன.
ஒவ்வொரு மெட்ரோ ரயிலும் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டுச் சோதனைகள் மூலம் முழுவதுமாக ஆய்வு செய்யப்பட்டு பராமரிக்கப்படுவதுடன், தகுதிச் சான்றிதழும் வழங்கப்படுகிறது. இது தவிர, ஒவ்வொரு மெட்ரோ ரயிலும் ஒரு பெரிய அளவிலான இடைநிலை சீரமைப்புப் (Intermediate Overhauling – IOH) பணிக்கு உட்படுத்தப்படுகிறது. இந்த முக்கிய சீரமைப்புப் பணியின் போது, ரயில் முழுமையாகப் பிரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. சக்கரங்கள் மற்றும் சஸ்பென்ஷன் அமைப்புகள் (suspension systems) உட்பட ரயிலின் அடிப்பகுதியில் உள்ள முக்கிய பாகங்கள் அகற்றப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு, தேவைப்படும் இடங்களில் பழுதுபார்க்கப்பட்டு, மீண்டும் வண்ணம் பூசப்படுகின்றன. தேய்ந்துபோன பாகங்கள் மாற்றப்படுகின்றன.
மென்மையான பயணத்தை உறுதி செய்வதற்காக சக்கரங்கள் மறுவடிவமைப்பு செய்யப்படுகின்றன. மேலும் மறைந்திருக்கும் குறைபாடுகளைக் கண்டறிய மேம்பட்ட முறைகளைப் பயன்படுத்தி அச்சுகள் சோதிக்கப்படுகின்றன. பிரேக்குகள், மின் சாதனங்கள் மற்றும் குளிரூட்டும் இயந்திரங்கள் போன்ற முக்கியமான அமைப்புகள் முழுமையாகப் பராமரிக்கப்படுகின்றன. சுகாதாரம் மற்றும் பயணிகளின் வசதியை உறுதி செய்வதற்காக, குளிரூட்டும் குழாய்கள் உட்பட ரயிலின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களைப் பயன்படுத்தி ஆழமாக சுத்தம் செய்யப்படுகின்றன. பாகங்கள் மீண்டும் பொருத்தப்பட்ட பிறகு, ரயில் தொடர்ச்சியான விரிவான பாதுகாப்பு மற்றும் செயல்திறன் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது.
இதில் நிலையான சோதனைகள் மற்றும் சோதனைத் தடங்கள் மற்றும் பிரதான வழித்தடங்களில் வெவ்வேறு வேகங்களில் சோதனை ஓட்டங்கள் ஆகியவை அடங்கும். அனைத்து பாதுகாப்பு மற்றும் செயல்திறன் தரங்களையும் பூர்த்தி செய்த பின்னரே, தகுதிவாய்ந்த அதிகாரியால் அந்த ரயில் பயணிகள் சேவைக்கு உகந்தது எனச் சான்றளிக்கப்படுகிறது. 52வது மற்றும் கடைசி மெட்ரோ ரயிலின் இடைநிலை சீரமைப்புப் பணி நிறைவடைந்ததன் மூலம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தனது முழு மெட்ரோ ரயில் தொகுதிக்கான திட்டமிடப்பட்ட சீரமைப்புப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இது சென்னை மக்களுக்கு பாதுகாப்பான, நம்பகமான மற்றும் உலகத் தரம் வாய்ந்த மெட்ரோ சேவைகளை வழங்குவதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
அனைத்து பராமரிப்பு பணிகளுன் நிறைவடைந்த பின் இந்த 52-வது மெட்ரோ ரயில் வருவாய் சேவைக்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் மனோஜ் கோயல் (அமைப்புகள் மற்றும் இயக்கம்) அவர்களால் கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமைப் பொது மேலாளர் ஏ.ஆர். ராஜேந்திரன், தலைமை ஆலோசகர் கோபிநாத் மல்லையா, ஆலோசகர் ராமசுப்பு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
