×

ரியல் எஸ்டேட் துறைக்கான 18% ஜிஎஸ்டி வரியை அடியோடு நீக்க வேண்டும்: பொன்குமார் வலியுறுத்தல்

 

சென்னை: ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் நலச் சங்கம் அமைப்பின் மாதவரம் தொகுதி நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாதவரம் அமைப்பாளர் ஆர்.அசோக்குமார் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் டி.கதிர்வேல், பொருளாளர் எ.வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தனர். தொகுதி தலைவர் இ.தர்மா வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவரும், ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் நல சங்கத்தின் நிறுவனத்தலைவருமான பொன்குமார் பங்கேற்று தொகுதி நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதில் சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.எம்.குமார், துணை தலைவர் து.ரஜினிராஜ், இணை செயலாளர் ஏ.ஜெ.நாகராஜ், அமைப்பு செயலாளர் எம்.அன்னலட்சுமி, சென்னை மண்டல தலைவர் வி.பி.வில்லியம்ஸ் ஆகியோர் பேசினார்.

கூட்டத்தில் தலைவர் பொன்குமார் பேசுகையில்,”தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் 11.19 விழுக்காடு பெற்று இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்வதற்கு காரணம் முதல்வர் மு.க.ஸ்டாலினின் அயராதப் பணி ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் இந்த பொருளாதார உயர்வுக்கு முக்கிய பங்களிப்பு அளித்திருப்பது ரியல் எஸ்டேட் துறையாகும். எனவே இந்த துறையைப் பாதுகாத்து தொழில் செய்பவர்களை மத்திய, மாநில அரசு ஊக்கப்படுத்த வேண்டும். பெருவாரியான மக்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் துறையாக ரியல் எஸ்டேட் உள்ளது. எனவே இத்துறையில் ஏற்படக்கூடிய தடைகளை போக்கி எளிமைப்படுத்தி இந்த தொழிலை வளர்க்க வேண்டும். எனவே மத்தியிலும், மாநிலத்திலும் ரியல் எஸ்டேட் துறைக்கு தனி அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும்.இந்த துறைக்கான 18% ஜிஎஸ்டி வரியை அடியோடு நீக்க வேண்டும். தொழிலாளர்களை அரசு அங்கீகரித்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். அமைப்புசாரா பட்டியலில் இணைத்து நலவாரிய பயன் பெற்றிட நடவடிக்கை வேண்டும்” என்றார்.

 

Tags : PONKUMAR ,Chennai ,Real Estate Operators' Welfare Association ,R. Asokumar ,Constituency ,D. Kathirvel ,Treasurer ,A. Venkateswaran ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப். 5ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்