×

வாக்கிங் செல்ல வந்தபோது கத்தியை காட்டி மிரட்டி தம்பதி உள்ளிட்ட 5 பேரை கட்டிப்போட்டு 15 சவரன், ரூ.25 லட்சம் கொள்ளை:சென்னை அருகே அதிகாலை பரபரப்பு

 

புழல்: சென்னை அருகே இன்று அதிகாலை வாக்கிங் செல்ல வீட்டில் இருந்து வெளியில் வந்தபோது கத்தியை காட்டி மிரட்டி தம்பதி மற்றும் தாய், 2 மகள்களை கட்டிப்போட்டு 15 சவரன், ரூ.25 லட்சம் கொள்ளையடித்து தப்பிய 6 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை புழல் மகாவீர் கார்டன் பிரதான சாலை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (50). ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி வசந்தா (45). இந்நிலையில் இன்று அதிகாலை வசந்தா வாக்கிங் செல்ல வீட்டில் இருந்து வெளியில் வந்தார். அப்போது, மறைந்திருந்த 6 பேர் கும்பல், வசந்தாவிடம் கத்தியை காட்டி மிரட்டி வீட்டுக்குள் புகுந்தனர். வீட்டுக்குள் இருந்த விஜயகுமார், அவரது தாய் மற்றும் 2 மகள்களை கயிறால் கட்டிப்போட்டனர். அதன்பிறகு வசந்தாவையும் கட்டிபோட்டனர். இதையடுத்து பீரோவில் வைத்திருந்த 15 சவரன் தங்க நகை, 25 லட்ச ரூபாயை கொள்ளையடித்துகொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.

இவர்களின் அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, கயிறுகளை அவிழ்த்து 5 பேரையும் மீட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் புழல் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்ப நாய் மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் சென்று திரும்பியது. கைரேகை நிபுணர்கள் பீரோவில் பதிவான ரேகைகளை சேகரித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர். கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் புழல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : Chennai ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப். 5ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்