×

கொள்கை ரீதியாக முடிவெடுக்க வேண்டிய ஒன்றிய அரசு வெறும் அறிவுரை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: சு. வெங்கடேசன் எம் பி.

மதுரை: கொள்கை ரீதியாக முடிவெடுக்க வேண்டிய ஒன்றிய அரசு வெறும் அறிவுரை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என சு. வெங்கடேசன் எம் பி. தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்திலிருந்து கூடுதல் சர்வதேச விமானங்களை இயக்குவது மற்றும் ஆசிய நாடுகளுக்கான (ASEAN) விமான சேவை ஒப்பந்தத்தில் மதுரையைச் சேர்ப்பது குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்குப் பதில் அளித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு விளக்கமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

கடிதத்தின் முக்கிய விவரங்கள்: கடந்த 2025 நவம்பர் 21 அன்று, மத்திய சிவில் விமானபோக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுஅவர்களுக்கு நான் ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதில், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட 11 ஆசியான்(ASEAN) நாடுகளுடன் கையெழுத்திடப்பட்டுள்ள இருதரப்புவிமான சேவை ஒப்பந்தத்தில் உள்ள 18 சுற்றுலாநகரங்களின் (Point of Call – POC) பட்டியலில் மதுரைவிமான நிலையத்தையும் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன்.

இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டால், ஆசியான் நாடுகளைச் சேர்ந்த சர்வதேச விமான நிறுவனங்கள் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து மதுரைக்கு நேரடியாக விமானங்களை இயக்க வழிவகுக்கும். தற்போது தமிழகத்தில் திருச்சிராப்பள்ளி விமான நிலையம் மட்டுமே இந்த 18 சுற்றுலா நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக, ஏர் ஆசியா, பாட்டிக் ஏர், சில்க் ஏர்போன்ற நிறுவனங்கள் ‘திறந்தவெளி வானக் கொள்கையின்’ (Open Skies Policy) கீழ் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றிஅங்கு விமானங்களை இயக்கி வருகின்றன.

மத்திய அரசின் நிலைப்பாடு மற்றும் முரண்பாடுகள்:
சர்வதேச விமான நிறுவனங்கள் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மதுரைக்கு விமானங்களை இயக்க அனுமதி கோரிவருகின்றன. ஏப்ரல்-2013-ல், சிங்கப்பூர் விமானநிறுவனங்கள் மதுரைக்கு விமானங்களை இயக்க ஏதுவாக, மதுரையையும் புனேவையும் கூடுதல் விமான நிலையங்களாக (Points of Call) அங்கீகரிக்கக்கோரி சிங்கப்பூர் அரசு விடுத்த அதிகாரப்பூர்வ கோரிக்கையை இந்திய அரசு நிராகரித்தது. இந்திய அரசு இதனை ‘கொள்கை முடிவு’ எனக் கூறிதொடர்ந்து மறுத்து வருகிறது.

சர்வதேச விமானங்களை இயக்கத் தொழில்நுட்ப ரீதியாகத் தகுதியற்ற கஜுராஹோ போன்ற உள்நாட்டு விமானநிலையங்களும், கடந்த 15 ஆண்டுகளாக ஆசியான்நிறுவனங்களால் ஒருமுறை கூட பயன்படுத்தப்படாத (Zero-Utilisation) அவுரங்காபாத், போர்ட் பிளேயர் போன்ற விமானநிலையங்களும் இந்தச் சிறப்புப் பட்டியலில் நீடிக்கின்றன.

ஆனால், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுடன் ஆழமான கலாச்சார மற்றும் வணிகத் தொடர்புகளைக்கொண்ட, அதிக தேவையுள்ள மதுரை விமான நிலையம் இந்தப் பட்டியலில் புறக்கணிக்கப்படுவது ஏன்? இதற்குப் பதிலளித்துள்ள மாண்புமிகு அமைச்சர் கிஞ்சராபு நாயுடு, தற்போதைய நிலையே தொடரும் என்றும், இந்தக் கொள்கை ஒருமுறை எடுக்கப்பட்ட முடிவு என்பதால் மதுரையைச் சேர்ப்பதற்காக மாற்றியமைக்க முடியாதுஎன்றும் தெரிவித்துள்ளார்.

இது எந்த வகையிலும் நியதியல்ல. வளர்ந்து வரும் ஒரு நகரத்தின் தேவையை கணக்கில் கொள்ளாமல் மாற்றவே முடியாத கொள்கையை கொண்டதாக அரசு பதிலளித்துக் கொண்டிருப்பது பழமைவாத அணுகுமுறை மற்றும் அரசியல் காரணங்களை உள்ளடக்கியதாகும். சர்வதேச விமானச் சேவைகளைத் தொடங்குவது என்பது முழுக்க முழுக்க விமான நிறுவனங்களின் வணிக ரீதியான முடிவாகும். பயணிகளின் எண்ணிக்கை, விமானங்களின் இருப்பு மற்றும் பொருளாதார ரீதியான லாபம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டே நிறுவனங்கள் இதனைத் தீர்மானிக்கின்றன.

இதில் ஒன்றிய அரசு தலையிடுவதில்லை என்று அமைச்சர் கூறியுள்ளார். “இருப்பினும், மதுரையின் முக்கியத்துவத்தைக் கருதி, அங்கிருந்து சர்வதேச விமானச் சேவைகளை விரிவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு அனைத்து இந்திய விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கும் (Indian Carriers) ஒன்றிய அரசு முறைப்படி கோரிக்கை விடுத்துள்ளதாக” அமைச்சர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். கொள்கை ரீதியாக முடிவெடுக்க வேண்டிய ஒன்றிய அரசு வெறும் அறிவுரை கூறுவதும், கோரிக்கை வைப்பதும் கண்துடைப்பு நடவடிக்கையாகும்.

Tags : EU government ,Shu. ,Venkatesan M B ,Madurai ,Surat ,Thackeray ,Venkatesan ,Madurai Airport ,Asian ,ASEAN ,
× RELATED மதவெறியை மாய்ப்போம்; மகாத்மாவைப்...