நீலகிரியில் கொட்டி தீர்க்கும் உறைபனி யூகலிப்டஸ் மரங்களில் இலைகள் அதிகரிப்பு

*தைலம் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு

ஊட்டி : பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால் யூகலிப்டஸ் மரங்களில் தற்போது இலைகள் அதிகமாக காணப்படுவதால் நீலகிரி தைலம் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆங்கிலேயரின் ஆட்சி காலத்தில் பல்வேறு தேவைகளுக்காக கற்பூர மரங்கள் (யூகலிப்டஸ் ) அதிகளவு நடவு செய்யப்பட்டன.துவக்கத்தில் இவைகள் அதிகளவு எரிபொருட்களுக்காக நடவு செய்யப்பட்டது.

மேலும், சதுப்பு நிலங்களில் தண்ணீரை உறிஞ்சவும் இந்த மரங்கள் அதிக அளவு நடவு செய்யப்பட்டன.ஆனால் காலப்போக்கில் இந்த மரங்களில் உள்ள இலைகளில் இருந்து யூகலிப்டஸ் தைலம் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளபட்டது.

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள யூகலிப்டஸ் மரங்களில் இருந்து சேகரிக்கப்படும் இலைகளில் இருந்து நீலகிரி தைலம் உற்பத்தி செய்யப்படுகிறது.இது இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவிலும் புகழ்பெற்றதாக உள்ளது.

மருத்துவ ரீதியாக பல்வேறு தேவைகளுக்கும் இந்த தைலம் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில்,இதன் தேவை அதிகரித்துள்ளது. எனினும் தற்போது இந்த மரங்களை பல்வேறு பகுதிகளிலும் அழித்து வருவதாலும்,வனப்பகுதிகளில் உள்ள மரங்களில் இருந்து இந்த இலைகளை சேகரிக்க வனத்துறையினர் தடை விதித்து வருவதாலும் இந்த தைலம் உற்பத்தி சற்று குறைந்துள்ளது.

எனினும், தற்போதும் இந்த தைலம் காய்ச்சும் தொழிலிலும், இலைகள் சேகரிப்பு பணிகளில் நீலகிரி மாவட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் உற்பத்தி செய்யப்படும் தைலம், பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. பொதுவாக, இந்த மரங்களில் கோடை காலத்திற்கு முன்னதாக வரும் வசந்த காலங்களில் அதாவது பனி காலத்தில் இலைகள் அதிகளவு காணப்படும்.

ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இந்த மரங்களில் அதிக அளவு இலைகள் காணப்படும். இந்த இலைகளை சேகரித்து நீலகிரி தைலம் அதிக அளவு உற்பத்தி செய்யப்படுகிறது.

இம்முறை பனிப்பொழிவு அதிகமாக காணப்படும் நிலையில் தற்போது அனைத்து பகுதிகளிலும் உள்ள கற்பூர மரங்களில் கற்பூர இலைகள் அதிகளவு துளித்து பச்சை பசேல் என காட்சி அளிக்கின்றன. இதன் மூலம் இம்முறை வழக்கத்தை காட்டிலும் கூடுதலாக நீலகிரி தைலம் உற்பத்தி செய்ய முடியும் என இந்த தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories: