24.1.2026 – சனி சஷ்டி
“சஷ்டி’’ என்ற சொல்லுக்கு `ஆறு’ என்று பொருள். இது சந்திரனின் சுழற்சியில் வரும் ஆறாவது திதியைக் குறிக்கிறது. மாதா மாதம் வரும் சஷ்டி திதி, முருகனுக்கு உகந்த விரத நாட்களாகக் கருதப்படுகிறது. அதிகாலையில் எழுந்து நீராடி, முருகப் பெருமானை மனதார வேண்டி விரதத்தைத் தொடங்க வேண்டும். விளக்கேற்றி, முருகப் பெருமானின் படத்தைப் பூக்கள் கொண்டு அலங்கரித்து வழிபடுவார்கள். இதன் பலனாக, தீராத துன்பங்கள் நீங்கும். திருமணத் தடைகள் நீங்கி, நல்ல வாழ்க்கை துணை அமையும். செல்வ வளம் பெருகும். குழந்தை இல்லாதவர்களுக்கு சந்தான பாக்கியம் கிடைக்கும்.
25.1.2026 – ஞாயிறு ரதசப்தமி
சப்தமி என்கின்ற ஏழாவது திதி சூரியனுக்கு உரிய நாளாக அமைந்திருக்கிறது. சூரிய பகவான், சப்தமி திதி அன்றுதான் காஷ்யபருக்கும் அதிதிக்கும் மகனாக அவதரித்ததாகச் சொல்கிறது புராணம். எனவே, தை அமாவாசை முடிந்த ஏழாவது நாள், வளர்பிறை சப்தமி. சூரிய தேவனின் ஜெயந்தி நாளாகக் கொண்டாடப்படுகின்றது. ரதசப்தமி நாளன்று ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் வடகிழக்கு திசையை நோக்கி பயணத்தை சூரியபகவான் மேற்கொள்ளுகின்றார். ரதசப்தமி நாளில், சூரியனுக்கு பொங்கல் வைத்து படைப்பதன் மூலமாக மிகச் சிறந்த பலன்களை பெறலாம். ஆத்ம சக்தி அதிகரிக்கும். பேராற்றல் பிறக்கும். தைரிய, வீரிய குணங்கள் வளரும். அறிவு கூர்மையாகும். ஞானம் வளரும். வித்தைகள் மேம்படும். கல்வியில் மிகச் சிறந்த வளர்ச்சி கிடைக்கும்.
திருமலை திருப்பதியில் ரதசப்தமி நாளன்று “ஏகதின பிரம்மோற்சவம்’’ நடைபெறும். அன்று மலையப்பசுவாமி, ஸ்ரீ தேவி பூதேவி தாயாருடன் காலை முதல் இரவு வரை ஏழு வாகனங்களில் நான்கு வீதிகளிலும் பவனி வருவார்.
1. காலை 5:30 மணியிலிருந்து 8:00 மணி வரை – சூரிய பிரபை வாகனம்.
2. காலை 9:00 மணியிலிருந்து 10:00 மணி வரை – சின்ன சேஷ வாகனம்.
3. காலை 11:00 மணியிலிருந்து 12:00 மணி வரை – கருட வாகனம்.
4. காலை 1:00 மணியிலிருந்து 2:00 மணி வரை – அனுமந்த வாகனம்.
5. பிற்பகல் 2:00 மணியிலிருந்து 3:00 மணி வரை – சக்கர ஸ்தானம்.
6. மாலை 4:00 மணியிலிருந்து 5:00 மணி வரை – கல்பவிருட்ச வாகனம்.
7. மாலை 6:00 மணியிலிருந்து 7:00 மணி வரை – சர்வபூபால வாகனம்.
8. இரவு 8:00 மணியிலிருந்து 9:00 மணி வரை – சந்திரபிரபை வாகனம்.
இவ்விழா ஸ்ரீ ரங்கம், காஞ்சிபுரம், திருவயிந்திபுரம் முதலிய திவ்ய
தேசங்களிலும் நடைபெறுகிறது.
பீஷ்மர், கங்கையின் புதல்வன். மகாபாரதத்தில் வருகின்ற முக்கியமான பாத்திரம். அஷ்ட வசுக்களில் ஒருவர். மரணமில்லா பெருவாழ்வு வாழ்ந்தவர். பகவான் கண்ணனையே எதிரில் அமர வைத்து, விஷ்ணுசகஸ்ர நாமம் சொன்னவர். உத்தராயணத்தில்தான் உயிர் துறப்பேன் என்று அம்புப் படுக்கையில் காத்திருந்து, தை மாத வளர்பிறை அஷ்டமி நாளில் நம்முடைய உடலை நீத்து சொர்க்க வாழ்வை பெற்றவர். ரதசப்தமி நாளில் அவரை வியாசர் வந்து பார்க்க, அவரிடம் தன் பாவங்கள் நீங்கி, முக்தி அடைய வழி கேட்டார். அப்போது வியாசர், எருக்க இலைகளைக் கொண்டுவந்து, பீஷ்மரின் மேனியில் வைத்து அவரின் வேதனையைத் போக்கினார். எருக்க இலை சூரிய பகவானுக்கு உரியது. சூரியனுக்கு அர்க்கன் என்பர்.
எருக்க இலைக்கு “அர்க்க பத்ரம்’’ என்ற பெயரும் உண்டு. ரத சப்தமி நாளில், ஏழு எருக்க இலைகளை சேகரித்து, நீராடும்முன், மூன்று இலைகளைத் தலையிலும், இரண்டு இரண்டு இலைகளைத் தோள்களிலும் வைத்து சூரியனை மனதார வேண்டி நீராட வேண்டும். ஆண்கள் நீராடும் போது இலைகளில் கொஞ்சம் விபூதியை இட்டும், பெண்கள் கொஞ்சம் மஞ்சள் பொடி இட்டும், நீராடுவது சிறந்தது. இவ்வாறு நீராடினால் பாவங்கள் விலகும்.
25.1.2026 – ஞாயிறு கலிகம்பர் குருபூஜை
அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவர், கலிக்கம்ப நாயனார். திருப்பெண்ணாகடம் என்னும் ஊரில் வணிகர் குலத்தில் அவதரித்தவர். அங்கு தூங்கனை மாடத் திருக்கோயிலில் எழுந்தருளிய ஈசனை ஒரு நொடிகூட விடாமல், சிவ சிந்தனையோடு வழிபட்டவர். அடியார்களை தேடித் தேடிச் சென்று அவர்களுக்கு இனிய திரு அமுதினை ஊட்டுவதை சிவபூஜையாக நினைத்து, இனிமையாக செய்தவர். ஒருநாள், சிவனடியார்களை மகேஸ்வர பூஜைக்காக அழைத்தார். ஒவ்வொரு சிவனடியாராக வர, அவர்களுக்கு கலிக்கம்ப நாயனாரின் மனைவியார், திருவடிகளை விளக்கி, பாத பூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது இவருடைய கடையில் வேலை பார்த்து, வேலையை விட்டுவிட்டு சென்ற ஒருவர், சிவனடியாராக வந்திருந்தார்.
அவர் வந்து மனைப் பலகையில் நிற்க, அவரைப் பார்த்த இவருடைய மனைவியார், இவர் ஏற்கனவே நம்மிடம் வேலை செய்தவர் அல்லவா, இன்று சிவனடியாராக வந்து நிற்கிறார், இவருக்கு நான் எப்படி பாத பூஜை செய்வது என்று தயங்க, சற்று நேரம் பாதபூஜை நின்றது. இதைக் கண்டு மிகக் கோபம் அடைந்த கலிக்கம்ப நாயனார், உடனே சிவ பூஜை செய்யாத தன்னுடைய மனைவியை தண்டித்தார். தானே எந்தவிதமான சலனமும் இன்றி அடியாரது திருவடிகளை விளக்கி அவருக்கு அமுது படைத்தார். அசஞ்சலமான அவரது சிவபக்தியை பார்த்து வியந்தனர். அப்போது சிவபெருமான், அங்கே தோன்றி அவர் மனைவியாரது மயக்கத்தைத் தீர்த்தார். முன்புபோல், அவர் எழுந்து கணவனோடு சிவனடியார்களுக்கு பூஜை செய்து சிவபதம் அடைந்தார். இவருடைய குருபூஜை நாள் தை மாதம் ரேவதி நட்சத்திரம்.
26.1.2026 – திங்கள் பீஷ்மாஷ்டமி
பீஷ்மர், முக்தி அடைந்த நாளில் புண்ணிய நதிகளில் நீராடி விரதம் இருந்தால் புத்திர பேறு உண்டாகும் என்று சொல்லப்படுகின்றது. அன்று பிதுர்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது.
27.1.2026 – செவ்வாய் தை கிருத்திகை
ஆண்டுக்கு மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். அவை, உத்தராயண துவக்கமான தைமாதம் வரும் தைகிருத்திகை. கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. முருகனுக்கு உகந்த நாட்களில் இன்றியமையாத இந்த நாள். செவ்வேளுக்குரிய செவ்வாய்க்கிழமையில் வருவது சிறப்பு. பத்தாவது மாதமான தை கிருத்திகையில், முருகனை மனமார நினைத்து விரதம் இருந்து வழிபட்டால், குழந்தை இல்லாத தம்பதியர்க்கு கட்டாயம் குழந்தை பிறக்கும். தைக் கிருத்திகை தினத்தில் விரதமிருந்து கந்தவேளை வணங்க அனைத்து கவலைகள், பிரச்னைகள், தொல்லை, தொந்தரவுகள் நீங்கி வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
28.1.2026 – புதன் ஆதி திருவரங்கம் மகாகும்பாபிஷேகம்
ஆதித் திருவரங்கம் திருவண்ணாமலைக்கும், மணலூர் பேட்டைக்கும் இடையில் உள்ளது. மகாபலிச் சக்ரவர்த்தி மற்றும் ஆழ்வார்களுக்கு முற்பட்டவராக இருக்கிறார் ரங்கநாதர். ஸ்ரீ ரங்கம் பெருமாள் அமைவதற்கு முன்பே இத்தலத்தில் அரங்கநாதர் பள்ளி கொண்ட நிலையில் அமைந்ததாச் சொல்வதால், இது ஆதிரங்கம் ஆனது. தினசரி ஆறுகால பூஜைகள் மற்றும் ஆண்டுக்கு சுமார் 12 திருவிழாக்கள் நடைபெறுகிறது. சித்திரை மாதத்தில் மிக முக்கியமான தேர் திருவிழா கொண்டாடப்படுகிறது. கோயில், காலை 6:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை திறந்திருக்கும். இத்தனைச் சிறப்பு பெற்ற இத்திருக்கோயில் குடமுழுக்கு, இன்று காலை 9:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள், மீன லக்னத்தில் நடைபெறுகிறது. இதற்கான யாகசாலை பூஜைகள், 26 ஆம் தேதி காலை 6:00 மணி முதல் துவங்குகின்றன.
29.1.2026 – வியாழன் ஜெய ஏகாதசி
தை மாத வளர்பிறையில் வரும் ஜெய ஏகாதசி நமக்கு அளவில்லாத வெற்றிகளை தரக் கூடியதாகும். தடைகள், துன்பங்கள், பாவங்களை நீக்கும் ஆற்றல் படைத்தது. இந்த விரதம் இருப்பவர்களுக்கு மட்டுமின்றி, அவரது முன்னோர்களும், அவருக்கு பிறகு வரும் சந்ததியினரும் பலனடையும் விதத்திலான தன்மை கொண்டதாகும்.
29.1.2026 – வியாழன் கண்ணப்ப நாயனார் குரு பூஜை
கண்ணப்ப நாயனாரின் குருபூஜை, தை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் நடைபெறுகிறது. அந்த தினம் இன்று. திண்ணன் என்பது இவர் பெயர். வேடர் குலத்தில் பிறந்தவர், வேட்டை ஆடுவதில் சிறந்தவர். நாணன், காடன் என்ற நண்பர்களோடு வேட்டையாடச் சென்றபோது, காளத்தி மலையில் குடுமித்தேவர் என்ற சிவலிங்கத்தினை கண்டார். அந்நாள் முதல் வாயில் நீர்சுமந்து வந்து அபிஷேகம் செய்தும், தலையில் சொருகி வந்த மலர்களாலும், இலைகளாலும் அர்ச்சனை செய்து, பக்குவப் பட்ட பன்றி இறைச்சியைப் படைத்தும் வந்தார். இதைக்கண்டு ஆகம விதிப்படி குடுமித்தேவரை வணங்கும் சிவகோசரியார் மனம் வருந்தினார். இறைவனிடம் முறையிட்டார். கண்ணப்பரின் அன்பினை சிவ கோசரியாருக்கு உணர்த்த ஒரு நாடகம் நடத்தினார் ஈசன்.
திண்ணனார் வரும் வேளையில், சிவலிங்கத்தி்ன் வலக்கண்ணில் குருதி வருமாறு செய்தார், சிவபெருமான். கண்ணில் குருதி வடிவதைக் கண்டு திண்ணனார், அழுதார். இறைவனுக்கே இந்த நிலையா என்று தவித்தார். பச்சிலை இட்டு மருத்துவம் பார்த்தார். ஆயினும் பலன் இல்லை. இதற்கு ஏதேனும் ஒரு வழி செய்தே தீர வேண்டும் என்று துடித்த அந்த துடிப்பில், தன் கண்ணை பறித்து லிங்கத்தின் கண்ணிருக்கும் இடத்தில் இட்டார். லிங்கத்தின் வலக்கண்ணில் வரும் குருதி நின்றது. ஆனால், இடக்கண்ணில் குருதி வழியத்தொடங்கியது, “இது என்ன சோதனை?” என்று நினைத்த திண்ணனார், தனது இடக்கண்ணையும் அகழ்ந்தெடுக்க திட்டமிட்டார். தன்னுடைய காலால், இறைவன் கண் உள்ள இடத்தை அடையாளப் படுத்திக் கொண்டு, தன் கையிலிருந்த அம்பால், தன் கண்ணைப் பறித்து, இறைவனுக்கு வைக்கத் துணிந்தார். “கண் கொடுத்த அப்பா, கண்ணப்பா’’ என்று இறைவன் அழைத்து, “நில் கண்ணப்ப” என்று சொன்னார். அவருடைய வைராக்கியத்தையும் தியாகத்தையும் கண்டு சிவபெருமான் காட்சி தந்தார்.
30.1.2026 – வெள்ளி அரிவட்டாயர் குருபூஜை
அரிவாட்டாய நாயனார், கணமங்கலம் என்னும் ஊரில் பிறந்தவர். இவரும் இவர் மனைவியும் சிவபெருமானிடம் மாறாத சிவபக்தியில் திளைத்தவர்கள். அரிவாட்டாய நாயனார் தினசரி செந்நெல் அரிசியும், செங்கீரையும், மாவடுவும் வைத்து கணமங்கலத்தில் கோயில் கொண்டிருந்த நீள்நெறி நாதருக்கு அமுது செய்விப்பார். இவர் செல்வம் குறைந்தது. கூலிக்கு வேலை செய்தாலும், நெல் வயலில் கிடைத்த நெல்லைக் கொண்டு இறைவனுக்கு திருவமுது ஆக்கினார். ஒரு நாள், அவர் தன் வயலில் விளைந்த செந்நெல், கீரை, மாவடு ஆகியவற்றை ஒரு மண் கலயத்தில் சுமந்து சிவபெருமானுக்கு சமர்ப்பிக்கச் செல்லுகின்ற போது கீழே விழுந்து கலயம் உடைந்து, எல்லா உணவுகளும் சிந்தியது.
“சிவபெருமானுக்கு எப்படி அமுது செய்விப்பது? இன்றைய பூஜை வீணாயிற்றே? இனி உயிரோடு இருந்து என்ன பலன்?” என்று தம்மை மாய்த்துக் கொள்ள முயன்றார். அப்பொழுது சிவபெருமான் அவர் முன்தோன்றி, தடுத்தாட்கொண்டு, அவருக்கு நற்பதம் அளித்தார். அவருடைய குருபூஜை நாள் தை மாதம் திருவாதிரை..
