நாகவல்லி முகூர்த்தம்

அவகாசத்தைப் பொறுத்து லாஜ ஹோமம் முடிந்தவுடன் பெரியோர்களை கவுரவிக்க வேண்டும். தாம்பாளத்தில் இரண்டு தேங்காய், வாழைப்பழம், தாம்பூலம், தட்சிணை வைத்துக் கொண்டு ஒவ்வொரு தடவையும் மணமகன் கையில் வைத்துள்ள தாம்பூலத்தில் மணமகள் தீர்த்தம் சேர்க்க வேண்டும். ஐந்து தாம்பூலங்களை ஐந்து பெரியவர்களுக்குக் கொடுக்க வேண்டும். வைணவ மரபில் சீர்பாடல் என்ற ஒரு சடங்கு உண்டு. வைணவ இல்லங்களில் நடைபெறும் திருமணங்களில் மிகச்சிறந்த நிகழ்ச்சியாக இந்தச் சீர்பாடல் நடைபெறும். நாச்சியார் திருமொழி ஆறாம்பத்து வைஷ்ணவர்கள் எல்லோரும் செய்விக்கும் நிகழ்ச்சியாகும். மணமகனும் மணமகளும் ஒரு பட்டுப் பாயில் எதிரெதிரே அமர்ந்து வாரணமாயிரம் பாசுரத்தைச் சே விக்கும் பொழுது மஞ்சள் தடவிய இரண்டிரண்டு தேங்காய்களை தங்கள் கைகளினால் உருட்ட வேண்டும். அப்பொழுது மாப்பிள்ளையின் உறவினர்கள், மணப்பெண்ணின் உறவினர்கள் பற்றிய அறிமுகமும் நடக்கும்.

மணப்பெண்ணின் மாமனார் இன்னார் என்பதை அவருடைய பெயருடன் சீர்பாடி களிமிண் களிப்போமே என்று கூறுவர். சில குடும்பங்களில் சில விஷயங்கள் செய்யாமல் இருக்கின்றார்கள். சில விஷயங்களைக் கூடுதலாகச் செய்கிறார்கள். சில குடும்பங்களில் நாகவல்லி முகூர்த்தம் என்று சொல்வார்கள். அதற்கு முதலில் மணமக்களை அழைத்து புதிய ஆடைகளை ஆசீர்வதித்துத் தந்து கட்டிக்கொண்டு வரச்சொல்வார்கள். அவர்கள் வந்து மணமேடையில் அமர வேண்டும். வேதிகையின் முன்னால் முளைப்பாரிகள், ஹோம பாண்டத்தை எழுந்தருளச் செய்வார்கள். பின்னர் சங்கல்பம் செய்து நாகவல்லி ஹோமம்செய்ய வேண்டும். அதற்கு கிருஷ்ண அஷ்டோத்தர சத நாமத்தைப் பயன்படுத்திக் கொண்டு செய்யலாம். இந்த ஹோமத்திற்கு ஆகுதி செய்து நிறைவு செய்யலாம். மணமக்கள் ஒருவருக்கொருவர் பூச்செண்டு, ஆடல் முதலிய நலுங்கு விளையாட்டுகளையும், பந்து விளையாட்டுகளையும் செய்வதும் உண்டு. இவைகள் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளவும், நாணம் நீங்கவும், கலகலப்பிற்காகவும் செய்யப்படுவது. இந்த ஹோமம் முடிந்த பின்னாலே சீர்பாடல் செய்கின்ற மரபும் உண்டு.

இந்த நாகவல்லி முகூர்த்தம் எல்லா திருமணங்களிலும் செய்யப்படுவதில்லை.சில பிரிவினர் செய்வார்கள். ஆனால் இது ஒரு சுவையான நிகழ்ச்சி திருமணத்தில் முதல் தாலி கட்டி,பெண் வீட்டுத் தாலி என்று கட்டுவார்கள். நாகவல்லி தாலிக்கயிற்றில் பொட்டு எனப்படும் தாலி கொடுக்கப்படும். முதல் தாலி கட்டும்பொழுது செலவு மாப்பிளை வீட்டார் செய்ய வேண்டும். நாகவல்லி முஹூர்த்தச் செலவு பெண் வீட்டா ருடையது.. தாலி கட்டும் பொழுது மாப்பிள்ளையின் அம்மா சகோதரிகள் பெண்ணுக்கு காசு பட்டம் கட்டுவது போல நாகவல்லி முடிந்ததும் பெண்ணின் சகோதரர் முறை கொண்டவர்கள் மாப்பிள்ளைக்கு தங்க பூணூல் போடும் பழக்கம் சில இடங்களில் உண்டு.திருமாங்கல்யத்தைப் பார்ப்பதற்கு கூட்டம் இருக்கிறதோ இல்லையோ நாகவல்லி முஹூர்த்தம் பார்ப்பதற்கு பெரும் கூட்டம் கூடும். காரணம் இதில் சிரிப்பு கூத்து கும்மாளம் எல்லாம் உண்டு. நாகவல்லி முகூர்த்தம் முறையாகச் செய்யாவிட்டால் அவ்வளவு எளிதாக புரோகிதரை விடமாட்டார்கள். இந்த மரபை தெரிந்துகொண்டு பெண்ணையும் மாப்பிள்ளையையும் பல வேடிக்கை விளையாட்டுக்களில் ஈடுபடுத்துவார் புரோகிதர்.

ஒரு பெரிய பூச்சரத்தை பந்துபோல் உருட்டி தூக்கிப்போட்டு விளையாடுவது, அந்தப் பந்தை அடிப்பது போல அவள் கையை நீட்டும் போது அது வேறு இடத்துக்குப் போகும். இதைப் பிடிக்க முடியவில்லையா என்று கேலி பேசி சிரிப்பார்கள்.பிறகு பெண் மாப்பிள்ளைக்கு கண்ணாடியைக் காட்டும் போது நேராகக் காண்பிப்பார். மாப்பிள்ளை பெண்ணுக்கு கண்ணாடியைக் காட்டும் பொழுது திருப்பி வைத்து காண்பித்து என்ன முகம் நன்றாக தெரிகிறதா என்று கேட்பார். பெண் தெரிகிறது என்று சொல்ல வேண்டும். அப்போது சுற்றி நிற்பவர்கள் எல்லாம் கேலி செய்வார்கள்.அடுத்து சமையல் கட்டிலிருந்து அப்பளம் காய்கறிகளை கொண்டு வந்து விளையாடுவார்கள். அந்த அப்பளத்தை மாப்பிள்ளையும் பெண்ணும் மாறி மாறி முகங்களில் தோள்களில் அடித்து உடைத்து விளையாட வேடிக்கையாக இருக்கும்.வாழை இலையை கொஞ்சம் கிழித்து, ‘‘கொஞ்சம் விசிறி விடு’’ என்று சொல்வார் மாப்பிளை அது என்ன காற்று வரும் ஆனால் காற்று வருகிறதா என்று கேட்பார்கள் என்று தலையாட்ட வேண்டும். ஒரு சகிப்புத்தன்மைக்காக இந்த விளையாட்டுகளை எல்லாம் செய்வது வழக்கம். மாப்பிள்ளையினுடைய பட்டுவேட்டித் தூண்டை தூளியாகக் கட்டி பெண்ணின் சகோதர முறை உள்ளவர்கள் கழுத்தில் மாலையாக போட்டு ஒரு பொம்மை குழந்தையை வைத்துக்கொண்டு தாலாட்டு சொல்வார்கள். குழந்தை பிறந்து விட்டது போல சீக்கிரமாக சந்தன பாக்கியம் கிடைக்க வேண்டும் என்ற மந்திரத்தை அப்போது சொல்லுவார்கள். அப்படி தொட்டில் ஆட்டும் போது அங்கேயும் கேலியும் கிண்டலும் இருக்கும்.

கொஞ்சம் தண்ணீரை எடுத்து அந்த துளியில் விட்டுவிட்டு குழந்தை சிறுநீர் கழித்து விட்டது.குழந்தையை தூக்காமல் என்ன செய்கிறாய் என்று கேட்பது போல அங்கேயே வசனங்கள் நடக்கும்.இப்படி பல்வேறு விளையாட்டுகளில் நேரம் போவதே தெரியாமல் ஒரு மணிநேரம் ஒன்றரை மணி நேரம் போய்விடும். ஒரு வாளித் தண்ணீரில் அல்லது குடத்தில் எதையும் போடாமல் என்னுடைய மோதிரம் விழுந்துவிட்டது எடுத்துக் கொடு என்று பெண்ணைக் கேட்க வேண்டும். பெண் நிஜம் என நம்பி தேட எல்லோரும் சிரிப்பார்கள். பிறகு நெஜமாலுமே மோதிரத்தை போட்டுவிட்டு யார் சீக்கிரம் எடுக்கிறீர்கள் பார்ப்போம் என்று சொல்ல அது இருவரும் அதில் தீவிரமாக மோதிரத்தைத் தேடி எடுப்பார்கள். யார் வெற்றி பெற்றாலும் அவர்களுக்கு ஒரு ஜய கோஷம் போடுவார்கள். இந்த நாகவல்லி முகூர்த்தம் முடிந்த பின்னால்தான் காப்பு நாணை விசர்ஜனம் செய்ய வேண்டும். காப்பு நாண் கட்டிய புரோகிதர் மணமகன் கையில் கட்டிய கங்கணத்தை அவிழ்ப்பார். மணமகன் மணமகளின் இடது கையில் கட்டிய கங்கணத்தை அவிழ்த்து கால் மிதிபடாத நீர் நிலைகளிலே சேர்க்கலாம். அதைப்போலவே, முளைப்பாலிகைகளை தாம்பாளங்களில் சேர்த்து மணமக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். சுமங்கலிகள் புடை சூழ ஆற்றங்கரையோ, குளத்தங்கரையோ செல்ல வேண்டும். அங்கு பாலிகைகளுக்கு ஆராதனம் செய்ய வேண்டும். செய்துவிட்டு அந்த ஆற்றிலே கங்கையாக நினைத்து சேர்த்துவிட்டு திரும்ப வரவேண்டும். திரும்பி வருகின்றபொழுது வாயிலில் அவர்களுக்கு மஞ்சள் ஆரத்தி, கும்ப ஆரத்தி எடுக்க வேண்டும்.

பின் மணமேடைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். முகூர்த்தக்கால் நட்டிருப்பார்கள். அங்கு அழைத்துச் சென்று அந்த முகூர்த்தக் காலுக்குத் தீபாராதனை செய்து அகற்ற வேண்டும். பின் மணமக்கள் சபையோருக்கு வணக்கம் சமர்ப்பிக்க வேண்டும். அப்பொழுது பெரியவர்கள் அட்சதைகளைத் தூவி ஆசீர்வதிக்க வேண்டும். இதற்கென்று ஆசீர்வாத மந்திரங்கள் உள்ளன. வடமொழியிலும், தமிழ் மொழியிலும் உள்ள இம்மந்திரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Related Stories: