தெளிவு பெறு ஓம்

?பொதுவாக கேள்வி: ‘‘ஐயம் இட்டு உண்” ‘‘பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றெல்லாம் பழைய பாடல்களில் வருகிறது ஐயம் வேறு ? பிச்சை வேறா ?
– புஷ்பலதா, திருப்பரங்குன்றம்.

ஐயம் – பிச்சை வேறுபாடு உண்டு.
ஐயம் இட்டு உண். இது ஒளவை வாக்கு.இதன் பொருள்:தன்னை நாடி வந்தோர் அனைவருக்கும் உணவு தந்துவிட்டு பின்னே உணவருந்த வேண்டும்.பிச்சை என்பது பசிக்கு உணவினை இல்லந் தோறும் சென்று யாசித்து பெறுவதாகும். இந்தக் கேள்விக்கு பதில் இன்னும் விளக்கமாக வேறு கோணத்தில் திருப்பாவையில் இருக்கிறது. ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி என்பது
ஆண்டாளின் பாசுரம்(திருப்பாவை 2).

இதற்கு விளக்கம் அளித்த பெரியவர்கள், ஐயம், பிச்சைப்பொருளை வகைப்படுத்தி இருக்கிறார்கள். ஐயம் என்பது தகுந்தவர்க்கு தருவது. பிச்சை என்பது பிரம்மச்சாரிகளுக்கு துறவிகளுக்கும் கொடுப்பது. அக்காலத்தில் கல்விச்சாலையில் பிரம்ம சாரிகள் படிப்பார்கள். அவர்கள் தங்கள் உணவுகளை பிச்சையாகப் பெற்றுத் தான் உண்பார்கள். கல்வி பயில்பவனை பசியில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு சமூகத்துக்கு உண்டு.

?யமுனைத்துறைவன் என்பது யாருடைய திருநாமம்?
– கேசவபெருமாள், புதுச்சேரி.

பகவான் கண்ணனுடைய திருநாமம். . யமுனைநதி அவன் விளையாடிய நதி. கண்ணன் அந்த நதியோடு கொண்ட தொடர்பையே அவனுக்கு நாமமாக இட்டிருக்கிறார்கள். இந்த நாமம் நாதமுனிகளுக்கு மிகவும் பிடித்த நாமம். அவர் வடக்கே யாத்திரையில், யமுனைத் துறையிலே தங்கியிருந்த பொழுது பேரன் பிறந்த செய்தி கிடைத்தது. அப்பொழுது யமுனைத் துறைவன் என்கிற பெயரை தன்னுடைய பேரனுக்குச் சூட்டினார். யமுனைத் துறைவன் பின்னால் ஆளவந்தார் என்று பெரும் புகழோடு விளங் கினார். ஆளவந்தார் ராமானுஜருக்கு குரு என்பதிலிருந்து இவர் பெருமை வழங்கும்.

?நவகிரக ஸ்தோத்திரம் தினசரி சொல்லலாமா?
– வித்யா பாலமுருகன், திருச்சி.

தாராளமாகச் சொல்லலாம். ஆனால் முதலில் பகவானை வணங்கிவிட்டு பிறகு நவக்கிரக சுலோகத்தைச் சொல்லுங்கள்.

?சோம மிருகசீரிஷம் என்று ஒரு நாள் இருக்கிறதா?
– இளையமாறன், நங்கநல்லூர் – திருச்சி.

ஆம்; இருக்கிறது.எந்த திங்கட்கிழமையில் மிருகசீரிஷம் நட்சத்திரம் வருகிறதோ, அந்த நாள் சிறப்புடைய நாள். அந்த நாளுக்கு சோம மிருகசீரிஷம் என்று பெயரிட்டிருக்
கிறார்கள். இந்த நாளில் வழிபாடு செய்வது, ஹோமங்கள் செய்வது மிக விசேஷ மாகும். பல மடங்கு பயன் தருவதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

?உதகசாந்தி என்பது என்ன? எதற்காகச் செய்கிறார்கள்?
– எஸ்.பாலதேவி, கரூர்.

உபநயனம், சீமந்தம் போன்ற முக்கிய சடங்குகளின் அங்கமாகவும், விசேஷ நாட்களிலும் செய்யப்படும் சாந்தி கர்மா இது. போதாயன மஹர்ஷியால் அபம்ருத்யு அரிஷ்டம் (ஆயுள் தோஷம்)ஆகியவற்றை விலக்கி நீண்ட ஆயுளை ஏற்படுத்தித் தருவதற்காகக் கூறப்பட்டுள்ளது. ஒரு கலசத்தில் (குடத்தில்) வருணனை பூஜை செய்து, உதக சாந்திக்குரிய வேத மந்திரங்களை ஜபம் செய்யச் சொல்லி, அந்த கலச ஜலத்தைக் கொண்டு கர்த்தாவுக்கு அபிஷேகம் செய்வார்கள்.

?நாம் என்னதான் நல்ல மனதோடு உண்மையான விஷயங்களைப் பேசினாலும் சிலருக்கு அது பிடிக்காமல் நம்மை விட்டு விலகுகிறார்களே?
– செல்லதுரை, நாகப்பட்டினம்.

எப்பொழுது நல்ல மனதோடு ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்று நினைத்து விட்டோமோ அதை சொல்லித்தான் ஆக வேண்டும். அதைத் தவறாகப் புரிந்துகொண்டு சிலர் விலகுகிறார்கள் என்றால் நஷ்டம் அவர்களுக்குத்தான். நம்மாழ்வார் இதை ‘‘சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவன்” என்ற பாசுரத்தில் அற்புதமாக விளக்குகிறார். நாம் சொல்லுகின்ற நல்ல விஷயங்கள் பிறருக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும் சொல்வதற்குக் காரணம் அவர்கள் நன்மை அடைய வேண்டும் என்பதற் காகத்தான் என்கிறார். பிடிக்கவில்லை என்பதற்காக நல்ல விஷயங்கள் சொல்லாமல் இருக்கமுடியாது.

?மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் உள்ள வேற்றுமை என்ன?
– செல்லதுரை, நாகப்பட்டினம்.

விலங்குகளுக்கு ஐந்தறிவு.மனிதனுக்கு ஆறறிவு சில மனிதர்களுக்கு ஆறாவது அறிவு வேலை செய்யவில்லை என்பது வேறு விஷயம். இவர்களை பசுவுக்குச் சமானம் என்று சாஸ்திரம் சொல்கிறது. உண்பது, உறங்குவது, சந்ததி விருத்தி முதலியவற்றை விலங்குகள் போலவே செய்துவிட்டு மாய்ந்து விடுவதால் இப்படிச் சொன்னார்கள். ஆனால் ஒரு விஷயம் பாருங்கள். ஐந்தறிவு படைத்த மிருகங்கள் தங்களுக்கு என்ன தேவையோ அதை மட்டுமே சாப்பிடும். தேவை முடிந்துவிட்டால் சாதுவாகிவிடுகின்றன.

தனக்கென்று எதையும் மிருகங்கள் சேர்த்து வைப்பதில்லை. இதிலெல்லாம் மனிதன் வேறுபடுகின்றான். இன்னொன்று.மிருகங்கள் ஆறாவது அறிவு கொண்டு இயங்காததால் மிருகங்களின் செயல்களினால் அதற்கு பாவங்கள் சேர்வது கிடையாது. ஆனால் சிந்தனைக்குரிய மனிதன் (யோசித்து வேலை செய்யும் மனிதன்) தவறு செய்யும்போது பாவம் அவனைச் சேருகிறது. இப்படிப்பட்ட விஷயங்கள்தான் மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள வேறுபாடாகக் கருதப்படுகின்றன.

?நேர்மறை சிந்தனை என்றால் என்ன?
– ஜே.வாசுதேவன், சென்னை.

ஒரு உதாரணம் சொன்னால் புரியும். ‘‘தப்பு செய்யாதே தப்பு செய்தால் கடவுள் உன்னை தண்டிப்பார்” என்று குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதும், ‘‘நல்லது செய், நல்லது செய்தால் கடவுள் உன்னை காப்பாற்றுவார்” என்று சொல்லிக் கொடுப்பதும் ஒரே விஷயம் தான். ஆனால் இரண்டாவதாகச் சொன்னது நேர் மறையாகச் சொல்லும் முறை. இதைத்தான் வள்ளல் பெருமான் தன்னுடைய பாடலிலே அற்புதமாகச் சொன்னார்.

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமெமான்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை

பேசா திருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்
மதமான பேய்
பிடியா திருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே

வேண்டும் உனை
மறவா திருக்க வேண்டும்
மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வுனான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்

தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.

அதற்கு முன்னால் நல்ல விஷயத்தையே ‘‘ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம், ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்” என்று செய்யாதே செய்யாதே என்று சொன்னார்கள். ஆனால் வள்ளலார் வரிசையாக சில விஷயத்தைச் சொல்லி வேண்டும் வேண்டும் என்று நேரடியாகச் சொன்னார். இதைத்தான் நேர்மறைச்சிந்தனை என்று சொல்கிறோம்.

?அதிர்ஷ்டத்தை எப்படிப்புரிந்து கொள்வது?
– வெங்கடேஸ்வரன், சுவாமிமலை.

ஒரு மரத்தில் நிறைய பழங்கள் காய்த்து தொங்குகின்றன. அதைப் பறிப்பதற்காக ஒருவன் கல்லால் அடிக்கிறான். சில பழங்கள் விழுந்தாலும், அங்கங்கே கிளைகளிலும் இலைகளிலும் சிக்கி இவன் கைக்கு கிடைக்காமல் போய்விட்டது. முயற்சி செய்தவன் வெறுத்துப்போய் அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டான். அரை மணி நேரம் கழித்து இன்னொருவன் வந்தான். இந்தப் பழத்தை எப்படி பறிப்பது என்று யோசித்தான். அப்பொழுது காற்று அடித்தது. ஏற்கனவே அங்கங்கே கிளைகளில் சிக்கியிருந்த பழங்கள் இவன் அடிக்காமலேயே கீழே விழுந்தன. இவனுக்கு எந்த முயற்சியும் செய்யாமலும் அந்தப் பழங்கள் கிடைத்தன. இதைத்தான் அதிர்ஷ்டம் என்று சொல்ல வேண்டும்.

?பெண்புத்தி பின்புத்தி என்று சொல்வது பெண்களை இழிவு படுத்துவது ஆகாதா?
– சரண்யாகுமரன், தாம்பரம்.

எல்லா பழமொழிகளுக்கும் சொலவடை அதாவது சொல்லாடல்களுக்கும் ஒரே அர்த்தத்தை எடுத்துக்கொள்ளக்கூடாது. வேறு அர்த்தங்களும் உண்டு. வந்த பிறகு யோசிப்பது என்பதைத்தான் பெண் புத்தி என்று சொல்கிறார்கள். ஆனால் வருவதற்கு முன் யோசித்துச் சொல்பவள் பெண். அவள் கூர்ந்த அறிவு உடையவள் என்றுதான் இலக்கியங்களிலும் இதிகாச புராணங்களிலும் பார்க்கிறோம். ராமாயணத்தில் சுக்ரீவன் வாலியைச் சண்டைக்குக் கூப்பிட்டவுடன் வாலி கோபமாகக் கிளம்புகிறான். தாரை தடுக்கிறாள். மிகவும் தர்க்கரீதியாக அவனோடு வாதிடுகிறாள்”. இதுவரை உன்னைப் பார்த்து பயந்து ஓடியவன் இப்பொழுது உன்னைக் கூவி அழைக்கிறான் என்று சொன்னால், ஏதோ ஒரு திட்டம் இருக்கிறது என்று பொருள். யாரோ ஒருவர் துணையாக வந்திருக்கிறார்கள்.(ராமன் என்பதையும் உளவு மூலம் தெரிந்துகொண்டு சொல்கிறாள்.) இப்போது சண்டைக்குப் போகாதே, உனக்கு ஆபத்து”என்று பின்னால் வருவதை முன்னால் கூறுகிறாள் .

ஒரு சாதாரண பெண்ணுக்கு கூட எத்தனை நுட்பமான அறிவு இருந்தது என்பதை காளிதாசன் வாழ்க்கையில் நடந்ததாக சொல்லப்படும் இந்த சின்ன சம்பவம் உணர்த்தும். இது செவி வக் கதையாக இருந்தாலும் இதிலே உள்ள நுட்பத்தை கவனிக்க வேண்டும்.ஒரு முறை மகாகவி காளிதாசர் வயல்வெளியே வெயிலில் நடந்து சென்ற போது தாகம் எடுத்தது..சற்று தூரத்தில் ஒரு கிராமப்பெண் கிணற்றில் தண்ணீர் சேந்தி குடத்தில் எடுத்து வந்து கொண்டிருந்தாள்!

காளிதாசர் அவரைப் பார்த்து அம்மா தாகமாக இருக்கிறது … கொஞ்சம் தண்ணீர் தருவீர்களா? என்று கேட்டார்…..அந்த கிராமத்துப்பெண்ணும், தருகிறேன் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் என்றாள்!

உடனே காளிதாசருக்கு ஒரு உயர்வு மனப்பான்மை ஏற்பட்டு, இந்த பெண்ணிடம் நாம் யார் என்று சொல்ல வேண்டுமா என நினைத்து நான் ஒரு பயணி அம்மா என்றார்!
உடன் அந்த பெண், உலகில் இரண்டு பயணிகள் தான்!ஒருவர் சந்திரன் ! ஒருவர் சூரியன்! இவர்கள் தான் இரவு பகலென பயணிப்பவர்கள் என்றாள்…..!சரி என்னை விருந்தினர் என்று வைத்துக் கொள் என்றார் காளிதாசர்!

உடனே அந்தப் பெண், உலகில் இரண்டு விருந்தினர் தான்! ஒன்று செல்வம்! இரண்டு இளமை!
இவை இரண்டும் தான் விருந்தினராக வந்து உடனே போய் விடும் என்றாள்!
சற்று எரிச்சலான காளிதாசர் தான் ஒரு பொறுமைசாலி என்றார்! ….

உடனே அந்த பெண் அதுவும் இரண்டு பேர்தான்…! ஒன்று பூமி! எவ்வளவு மிதித்தாலும், எவர் மிதித்தாலும் தாங்கும்!மற்றொன்று ‘‘மரம்”! யார் கல்லால் அடித்தாலும் பொறுத்துக் கொண்டு காய்களைக் கொடுக்கும் என்றாள்!சற்று கோபமடைந்த காளிதாசர் நான் ஒரு பிடிவாதக்காரன் என்றார்!
அதற்கும் அந்த பெண் உலகிலேயே பிடிவாதக்காரர்கள் இரண்டு பேர் தான்…ஒன்று முடி! மற்றொன்று நகம்!
இரண்டும் எத்தனை முறை வேண்டாம் என்று வெட்டினாலும்பிடிவாதமாக வளரும் என்றாள் சிரித்தபடி!….

காளிதாசர் செய்வதறியாது, அந்த பெண்ணின் காலில் விழுந்தார்! உடனே அந்த பெண் மகனே… எழுந்திரு… என்றதும் நிமிர்ந்து பார்த்த காளிதாசர் மலைத்துப்போனார்.சாட்சாத் சரஸ்வதி தேவியே அவர் முன் நின்றாள்!காளிதாசர் கைகூப்பி வணங்கியதும்,தேவி தாசரைப் பார்த்து… காளிதாசா! எவன் ஒருவன் தன்னை மனிதன் என்று உணர்கின்றானோ, அவனே மனிதப்பிறவியின் உச்சத்தை அடைகிறான்! ‘‘நீ மனிதனாகவே இரு” என்று கூறி தண்ணீர்க்குடத்தை காளிதாசர் கையில் கொடுத்து சரஸ்வதி தேவி மறைந்தாள்…! பெண்ணின் கூர்மையான அறிவுக்குச் சொல்லப்படும் கதையாக இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

?வழிபாட்டிற்கு எது முக்கியம்?
– செல்லதுரை, பல்லடம்.

பொறுமைதான் முக்கியம். இன்றைக்கு பல வழிபாட்டுத் தலங்களில் பொறுமை இல்லாததைப் பார்க்கிறோம். வழிபாட்டிற்கு முக்கியமானது பொறுமை என்பதை மறந்துவிடக்கூடாது. இன்னும் ஆழமாகச் சொல்லப்போனால் பொறுமையாக இருப்பதே ஒரு வழிபாடுதான்..

தேஜஸ்வி

Related Stories: