“ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது’’ என்ற ஒரு பழமொழி நம் தமிழ்நாட்டில் உண்டு. ஆமை ஒரு வீட்டிற்குள் புகுந்துவிட்டால், அந்த வீடு உருப்படாமல் போய்விடும் என்று இந்த பழமொழிக்கு பொருள் கொண்டு, ஆமையை துரதிர்ஷ்டசாலி என்று குறிப்பிடுகின்றன நம் மக்கள். உண்மையில், ஆமை திருமாலின் அருள் பெற்ற ஒரு உயிரினம் ஆகும். திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றான கூர்ம அவதாரம், ஆமை அவதாரத்தை குறிப்பதாகும். ஆம், மகாவிஷ்ணுவின் இரண்டாவது அவதாரம் ஆகிய பாற்கடல் கடையலில் மந்தார மலையை சாயாமல் தாங்கிய கூர்ம அவதாரணி ஆமை ஆகும்.
ஆமை அதிர்ஷ்டத்தின் உருவம்
ஆமை வீட்டிற்குள் புகுந்தால், உங்கள் வீட்டிற்கு லட்சுமி வரப்போகிறாள் என்று அர்த்தமாகும். வட இந்தியாவில் அநேகர் வீட்டில் வாசற்படியில் ஆமை உருவத்தை பதிய வைத்திருப்பார்கள். மேலும், சீனா “வெங்சூல் ஆமையை’’ அதிர்ஷ்டம் தரும் பொருளாகவே கருதுகிறது. ஆமை நீண்ட ஆயுளை குறிக்கிறது. மேலும், இது அதிர்ஷ்டத்தையும் குறிக்கிறது. எனவே, யதார்த்தமாக ஆமையை நீங்கள் பார்க்கும் நிலை ஏற்பட்டால், அது உங்களுக்கு எதிர்காலத்தில் வரப்போகும் அதிர்ஷ்ட நிலையை குறிக்கும் அறிகுறியாகும்.
ஆலயங்களில் ஆமையின் சிறப்பு
தமிழ்நாடு, கேரளா, ஆந்திர மாநில கோயில்களில் ஆமைகளின் சிற்பம் உண்டு. பொதுவாக, ஆமை ஆசனங்களை பல கோயில்களில் காணலாம். பெரும்பாலும் கோயில்களில் விளக்கிற்கு கீழே ஆமை உருவம் கண்டிப்பாக இருக்கும். குன்றத்தூர் கோயிலில், காச நோயாளிகளுக்கு மார்பில் ஆமை படம் போட்டு நேர்த்திக்கடன் செய்கின்றனர். ஜன வசீகரம் இல்லாத ஜன நடமாட்டம் அதிகம் இல்லாத கோயில்களில் வியாபார ஸ்தலங்களில் ஆமைகளை ஸ்தாபிதம் செய்ய, வியாபாரம் வசியம் தன வசியம் வந்தடையும். அது மட்டுமின்றி அந்த கோயில்கள் வியாபார ஸ்தலங்கள் பன்நெடுங்காலம் சீரும் சிறப்புமாய் இருந்து வரும். ஆமை படத்தை வீட்டில் வைப்பது பூஜை அறையில் வைப்பது மிக சிறந்த பலனை தரும். ஆமையை தினசரி பார்த்து வருவது, தன வரவை அதிகப்படுத்தக் கூடிய ஒன்றாகும்.
வீடுகளில் ஆமை
ஆமை உங்கள் வீட்டில் இருந்தால், நீண்ட ஆயுள் ஆரோக்கியம், அதிர்ஷ்டம், வெற்றிகரமான வாழ்க்கை உங்களைத் தேடி வரும். அதனை வீட்டு தோட்டத்தில் உள்ள சிறு குளத்தில் வளர்க்கலாம். குறிப்பாக, வடக்கு திசையில் வளர்ப்பது மிகவும் சிறப்பானது. இல்லையென்றால், ஆமை டிராகன் ஆமை சிலைகளை வீட்டில் வைத்திருப்பதன் மூலமும் அதிர்ஷ்டத்தை அதிகரிக்க முடியும். ஆமை சிலைகளை வைக்கும்போது, அவை எந்த பொருளால் ஆக்கப்பட்டது அதனை வீட்டின் எந்த பகுதியில் வைக்கின்றோம் என்பதை பொறுத்து வாழ்க்கையின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்க முடியும். உதாரணத்துக்கு உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருப்பதற்கு, மரத்தில் செய்யப்பட்ட ஆமையை கிழக்குப்
பகுதியில் வைப்பது சிறந்தது.
ஆமையை வீட்டில் வைப்பதன் பயன்கள்
ஆமையானது, வீட்டில் நேர்மறை சக்திகளை பரவச் செய்யும். ஆமையை உங்கள் வீட்டில் வைப்பதற்கு சில விதிகளை நீங்கள் பின்பற்ற வேண்டும். இதன்படி செய்யாவிட்டால் நேர்மறை ஆற்றல் இல்லாமல், நடுநிலையாக்கப்பட்டு விடும். எனவே இதை சரியான திசையில் பார்த்து வைப்பது மிகவும் முக்கியம். ஆமையை வீட்டின் நுழைவாயில் கதவில் பொருத்தலாம். ஏனெனில் இந்த வழியாகத்தான் உங்கள் வீட்டினுள் எதிர்மறை எண்ணங்கள் குடி கொள்ளும். இதனால்தான் வீட்டில் பிரச்னைகள் கொடி கட்டி பறக்கும். எனவே இந்த மாதிரியான வாக்குவாதங்களை தவிர்க்க ஆமையை வீட்டின் நுழைவாயில் கதவில் பொருத்தலாம். இதை கிழக்கில் வைத்தால் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் மேம்படும். வடகிழக்கு திசையை நோக்கி ஆமையை வைப்பதன் மூலம் வீட்டில் பணப் பற்றாக்குறையே இருக்காது. தொழிலில் உடனடியாக முன்னேறவும் வெற்றி பெறவும் விரும்பினால் உங்கள் கடைகள் அல்லது தொழில் புரியும் இடங்களில் இந்த ஆமையை வையுங்கள்.
பண வரவு ஏற்பட…
வீட்டிலும், அலுவலகத்திலும் ஒரு ஸ்படிக ஆமையை வைத்திருந்தால், அதன் வழியே பணவரவு பொழியும்.
நோய் அண்டாது இருக்க…
வீட்டில் உள்ள உறுப்பினர்கள் அடிக்கடி நோய்வாய் பட்டால், மண்ணால் செய்யப்பட்ட ஆமையை வாங்கி வையுங்கள். மண் எப்படி நீரில் கரைந்து போகுமோ அதுபோல நோயும் கரைந்து போகும் என்பது நம்பிக்கை.
வெற்றி கிட்ட…
சில நேரம், நீங்க என்னதான் கடினமாக உழைத்தாலும், வேலையில் வெற்றி காண முடியாது. நல்ல வேலை கிடைக்காது. தேர்வில் வெற்றி பெற முடியாமல் கஷ்டப்படுவீர்கள். இந்த மாதிரியான பிரச்னைகளை சமாளிக்க பித்தளையால் செய்யப்பட்ட ஆமையை வீட்டில் வாங்கி வையுங்கள். வேலையில் வெற்றி நிச்சயம்.
குடும்பத்தில் அமைதி ஏற்பட
ஒவ்வொருவரும் சிறுசிறு பிரச்னை களை வாழ்வில் சந்திப்பது என்பது சகஜமான விஷயம். ஆனால், இந்த சிறு பிரச்னைகள் குடும்பத்தில் பெரிய பிளவு ஏற்பட காரணமாக அமைந்துவிடும். எனவே, இந்த மாதிரியான விளைவுகளை தடுத்து குடும்பத்தில் குதூகலமும் அமைதியும் நிலவ ஜோடி ஆமைகளை வீட்டில் வாங்கி வைக்கலாம்.
எடுத்த காரியம் நிறைவேற…
நீங்கள் புதிதாக ஒரு நிகழ்ச்சி நடத்தினாலோ அல்லது புதிதாக வியாபாரம் தொடங்கினாலோ அதில் நஷ்டம் இடைஞ்சல்கள் அமையாமல் வெற்றி அடையவும், லாபத்தை ஈட்டவும் வெள்ளியால் செய்யப்பட்ட ஆமையை வாங்கி வைத்து தொடங்குங்கள். எடுத்த காரியம் நிறைவேறும். நினைச்சபடி வெற்றி மாலை சூடுவீர்கள்.
குழந்தை பாக்கியம் கிடைக்க…
நிறைய தம்பதியினர் குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கிக் கொண்டு இருப்பார்கள். அவர்கள் குழந்தை வடிவ ஆமையை வாங்கி வீட்டில் வைத்தால், வீட்டில் சீக்கிரமாகவே குழந்தை சத்தம் கேட்கும்.
ஆமை கோயில்கள்
ஆந்திராவில் உள்ள கூர்மம் கோயிலில், ஆமை வடிவில் பெருமாள் காட்சியளிக்கிறார். இது ஆந்திராவின் கா குளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சித்தூரில் உள்ள கூர்ம வரதராஜ சுவாமி கோயிலில், விஷ்ணு ஆமை வடிவில் உள்ளார். கர்நாடகாவில், கவிரங்கபுரா என்பது சித்ரதுர்காவின் ஹோசதுர்கா நகருக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமம் அங்கு விஷ்ணு ஆமை வடிவத்தில் இருக்கிறார். தமிழ்நாட்டில், அவிநாசியில் அவிநாசி லிங்கர் கோயிலின் தெப்பக்குளத்தில் ஆமைகள் காணப்படுகின்றன. இது பக்தர்களுக்கு பரவசத்தை அளிக்கிறது. திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் வளாகத்தில் நுட்பமான சிற்பங்களுடன் கூடிய மண்டபம் ஆமை மண்டபம் என
அழைக்கப்படுகிறது.
