சங்கராபுரம் : கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியில் பண பயிரான கோலியஸ் மருந்து செடியை பயிரிடுவதில் விவசாயிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து வேளாண் ஆலோசகர் சதீஷ் மன்னன் கூறுகையில், சங்கராபுரம் பகுதியில் உள்ள அரசம்பட்டு, பூட்டை, செம்பரம்பட்டு, மூலக்காடு பாப்பாத்தி மூளை, மல்லாபுரம், புதுப்பட்டு, புத்திராம்பட்டு, கொசப்பாடி, செல்லம்பட்டு, பொய் குணம், சேஷ சமுத்திரம், நெடுமானூர், ராமராஜபுரம், பழையனூர் உள்ளிட்ட பகுதிகளில் பணப் பயிரான கோலியஸ் மருந்து செடியை விவசாயிகள் அதிக அளவில் பயிரிட்டு பயன் பெற்று வருகிறார்கள். இது 6 மாத கால பயிராகும்.
இந்த கோலியஸ் மருந்து செடியை பயிரிடுவதற்கு தோட்டக்கலை துறை மூலம் அனைத்து வகையான இடுப்பொருட்களும், சொட்டு நீர் பாசனத்திற்கு 100% மானியத்தில் வழங்குகிறார்கள். அதனை பயன்படுத்தி இப்பகுதி விவசாயிகள் கோலியஸ் மருந்து செடியை பயிரிட்டு வருகிறார்கள்.
செடி அறுவடையின்போது மருந்து கம்பெனிகள் வயல்வெளிக்கு நேரடியாக சென்று மருந்து செடிகளை வாங்கிக் கொண்டு பணத்தை கையிலே அதே இடத்திலேயே பட்டுவாடா செய்துவிட்டு செல்கிறார்கள்.
இதனால் விவசாயிகளுக்கு உடனடியாக கையில் பணம் கிடைத்து விடுகிறது. குறைந்த பராமரிப்பு செலவில் அதிக லாபம் தரக்கூடிய பயிராக கோலியஸ் மருந்து செடி இருப்பதால் சங்கராபுரம் பகுதி விவசாயிகள் கோலியஸ் மருந்து செடி பயிரிட்டு பயன்பெற்று வருகிறார்கள் என்றார்.
மழை காலங்களிலும் வெயில் காலங்களிலும் இந்த மருந்து செடியை விவசாயிகள் பயிரிட்டு பயனடைகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
