*குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு
நெல்லை : பாளை கக்கன்நகர் பகுதிக்கு குடிநீர் திறக்க மாநகராட்சி ஊழியரை நியமிக்க வேண்டும் என மாநகராட்சி குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
நெல்லை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடந்தது. துணை மேயர் கேஆர்.ராஜூ, உதவி பொறியாளர் ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி செயற்பொறியாளர் அலெக்ஸாண்டர், சுகாதார அலுவலர்கள் சாகுல் ஹமீது, பாலச்சந்தர், உதவி பொறியாளர் பைஜு, நிர்வாக அலுவலர் காசி விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதில் நெல்லை மாநகராட்சி 5வது வார்டு கவுன்சிலர் ஜெகநாதன் தலைமையில் கக்கன் நகர் பகுதி மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பாளை கக்கன் நகர் பகுதியில் சுமார் 1500 பேர் வசித்து வருகின்றனர். கடந்த 4 மாதங்களாக எங்கள் பகுதிக்கு தண்ணீர் திறப்பதற்கு உரிய ஆட்கள் இல்லை. ஊர் மக்களே தண்ணீர் திறக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
மேலும் தண்ணீர் திறப்பதற்கு நியமிக்கப்பட்ட தனியார் நிறுவனம் அதற்குரிய தொகையை பெற்றுக் கொண்டு வருகிறது. கக்கன் நகர் பகுதியில் கழிவுநீர் உடைந்து செல்கிறது. பாதாள சாக்கடையும் பல்வேறு இடங்களில் சீர்கேடாக உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. கக்கன் நகர் பகுதியில் இருந்து வயல்வெளிக்கு செல்ல எங்களுக்கு ஒரு பாலம் கட்டி தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை டவுன் பழையபேட்டை அனவரத சுந்தர விநாயகர் கோயில் வடக்கு தெரு பொதுமக்கள் அளித்த மனுவில், ‘‘எங்கள் தெருவில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு சாலை போடப்படாமல் உள்ளது.
இப்போது பாதாள சாக்கடை குழாய் பதிப்பிற்காக தோண்டப்பட்ட சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வயதானவர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக அந்த சாலையை சீரமைக்கவும், குடிநீர் நீர்த்தேக்க தொட்டி அமைத்து தரவும் கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
