புதுடெல்லி: ஜீவனாம்ச வழக்குக்காக பிரிந்து வாழும் கணவரின் பொதுவான வருமான விவரங்களை மனைவிக்கு வழங்க வருமான வரித்துறைக்கு உத்தரவிட்ட மத்திய தகவல் ஆணையம், திருமண தகராறுகளில் தனியுரிமை அடிப்படையில் இத்தகைய தகவல்களை மறுக்க முடியாது என கூறி உள்ளது. ஜீவனாம்சம் வழங்காமல் தப்பிக்க தனது உண்மையான வருமானத்தை கணவர் மறைப்பதாக குற்றம்சாட்டி, அவரது கடந்த 5 ஆண்டுக்கான வருமான விவரங்களை தெரிவிக்குமாறு பிரிந்து வாழும் மனைவி வருமான வரித்துறையிடம் ஆர்டிஐ மூலம் கேட்டிருந்தார். தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 8(1)ன்படி மூன்றாம் தரப்பினரின் தனிப்பட்ட தகவல்களை வழங்க முடியாது என ஆர்டிஐ மனுவை வருமான வரித்துறை நிராகரித்தது.
இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட மனுவை விசாரித்த தகவல் ஆணையர் வினோத் குமார் திவாரி பிறப்பித்த உத்தரவில், ‘‘ஜீவனாம்ச வழக்குகளுக்காக சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்துகொண்ட மனைவியால் கோரப்படும்போது, வருமானம் தொடர்பான தகவல்கள் முற்றிலும் தனிப்பட்டதாக இருப்பதில்லை. ஜீவனாம்ச வழக்குகளைத் தீர்ப்பதற்காக தனது கணவரின் வருமான விவரங்களைக் கோரும் கைவிடப்பட்ட மனைவிக்கு, அத்தகவல்களைப் பெறுவதற்கு உரிமை உண்டு. இதுபோன்ற வழக்குகளில் பொதுவான வருமான விவரங்கள் வெளியிடப்படலாம். வருமான வரி அறிக்கைகளின் நகல்கள் மற்றும் பிற முக்கியமான தனிப்பட்ட விவரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியிடுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன என்பதை மீண்டும் உறுதிபடுத்துகிறோம்’’ என கூறி உள்ளார்.
