தூத்துக்குடியில் துணிகரம் போலீஸ்காரர் வீட்டை உடைத்து 23 பவுன் நகை, பணம் கொள்ளை

தூத்துக்குடி, ஜன.29: தூத்துக்குடியில் ரயில்வே போலீஸ்காரர் வீட்டை உடைத்து ரூ.9.50 லட்சம் மதிப்பிலான 23 பவுன் நகைகள் மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி சோரீஸ்புரம் அருகேயுள்ள நியூ சுந்தர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(52). இவர் சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் தூத்துக்குடியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் விடுமுறைக்காக பாலசுப்பிரமணியன் தூத்துக்குடி வந்தார். நேற்று அவர் மற்றும் குடும்பத்தினர் ஆத்தூர் அருகே தலைவன்வடலியில் வசித்தும் பெற்றோர் வீட்டுக்கு சென்றார். அதன் பின்னர் இரவு சுமார் 7மணி அளவில் அனைவரும் வீடு திரும்பினர். அப்போது வீட்டிற்குள் சென்றபோது பின்பக்க ஜன்னல் உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். பாலசுப்பிரமணியன் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த சுமார் 23 பவுன் எடையிலான நகைகள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.9.50 லட்சம் என தெரிகிறது.

இதுகுறித்த தகவலின் பேரில் சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகைகளை பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடியில் ரயில்வே போலீஸ்காரர் வீட்டை உடைத்து நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: