சென்னை: தமிழகத்ததில் சுற்றுலா மலைப்பகுதிகளில், மதுபான பாட்டில்கள் வீசப்படுவதை தடுக்க ஒவ்வொரு பாட்டிலுக்கும் 10 ரூபாய் அதிகம் வைத்து விற்பனை செய்து விட்டு, காலி பாட்டில்களை திரும்ப தரும் பட்சத்தில் 10 ரூபாயை திரும்ப அளிப்பது என்ற காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்த சுற்றுச்சூழல் மற்றும் வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு உத்தரவிட்டிருந்தது.
இதை மாநிலம் முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்குகள் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன. கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, தமிழகம் முழுவதும் உள்ள 28 மாவட்டங்களில் மதுபான பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
மூன்று மாவட்டங்களில் பாதி அளவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏழு மாவட்டங்களில் இத்திட்டத்தை எதிர்த்து டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடத்துவதால் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்தப்படும். இதே போல் க்யூஆர் கோடுமுறை அமல்படுத்த மீண்டும் டெண்டர் கோரப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பண்டிகை காலங்களில் டாஸ்மாக் விற்பனை ஆயிரம் கோடி என்று சாதனை படைக்கிறது. ஆனால், உத்தரவை அமல்படுத்துவதில் என்ன பிரச்னை? இனிமேல் கால அவகாசம் வழங்க முடியாது என்று தெரிவித்து விசாரணையை பிப்ரவரி மாதத்திற்கு தள்ளிவைத்தனர்.
