சட்டப்பேரவை கூட்டத்தை தொடர்ந்து குடியரசு தின விழாவிலும் அரசு தயாரித்து கொடுக்கும் உரையை படிக்க ஆளுநர் மறுப்பு? ஒன்றிய அரசுக்கு எதிரான விமர்சனம் உள்ளதால் புறக்கணிப்பு

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மாநில அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல் புறக்கணித்த மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட், நாளை நடக்கும் குடியரசு தின விழாவிலும் அரசு தயாரித்து கொடுக்கும் உரையை படிக்காமல் தவிர்க்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாநில சட்டப்பேரவைகளின் முதல் கூட்டத்தொடர் நடக்கும்போது, மாநில ஆளுநர் உரையாற்றுவது வழக்கம்.

அப்போது நடப்பு நிதியாண்டில் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மற்றும் வரும் நிதியாண்டில் செயல்படுத்த திட்டமிட்டுள்ள திட்டங்கள் தொடர்பான தகவல்கள் ஆளுநர் உரையில் இருக்கும். பேரவை கூட்டத்தொடர் கடந்த 22ம் தேதி தொடங்கிய போது அரசு உரையில் ஒன்றிய அரசை கண்டித்து பல பத்திகள் இருந்ததால் ஆளுநர் உரையை படிக்காமல் புறக்கணித்தார்.

இந்நிலையில் அரசு தயாரித்து தரும் உரையை குடியரசு தினவிழாவிலும் ஆளுநர் வாசிக்க வேண்டும். சட்டமன்றத்தில் அரசு தயாரித்த உரை அப்படியே ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆளுநர் அந்த உரையை அப்படியே அரசுக்கு திருப்பி அனுப்பினார். திருத்தங்கள் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார். அரசு இதை செய்யாத பட்சத்தில் குடியரசு தினவிழாவில் சொந்தமாக உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: